ஈரானில் கவிழும் ஆட்சி? கமேனிக்கு எதிராக பொதுமக்கள் கொதிப்பது ஏன்? பின்னணியில் பட்டத்து இளவரசர்
டெஹ்ரான்: ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 60 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்கா, இஸ்ரேல் ஈரானில் போராடும் மக்களுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சி கவிழ்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே தான் ஈரான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட முக்கிய காரணம் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி தான் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஈரான்.. தற்போது உள்நாட்டு பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது போதாது என்று கடந்த ஆண்டு இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது. பிறகு இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரான் அணுகுண்டு தயாரிப்பதை தடுப்பதாக கூறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இதனால் ஈரான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நாட்டின் நிதி நிலைமை மோசமாகி உள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான உள்நாட்டு கரன்சியின் மதிப்பு உயர்ந்துள்ளது. மார்க்கெட்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் மதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஈரானின் பரமஎதிரிகளாக உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‛‛ஈரான் மக்கள் தங்களின் சுதந்திரத்துக்காக போராட்டம் நடத்துகின்றன. ஈரானில் நடக்கும் போராட்டம் அங்கு வசிக்கும் 92 மில்லியன் மக்களுக்கு திருப்பு முனையாக இருக்கும். இஸ்ரேல் நாடும், அரசும், நானும் ஈரான் மக்களின் போராட்டம், சுதந்திரம், விடுதலை உள்ளிட்டவற்றை எதிர்நோக்கி காத்து இருக்கிறோம். இலக்கு நிறைவேற வாழ்த்துகள்'' என்றார்.
அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்போ, ஈரானில் போராட்டத்தை முடக்க கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையே தான் ஈரானில் போராட்டத்தை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு முயன்று வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமாகி உள்ளது. கடந்த மாதம் 28 ம் தேதி வெடித்த போராட்டம் நாடு முழுவதும் பரவி உள்ளது. தற்போது வரை ஈரானில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2,000க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இண்டர்நெட் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் கொந்தளிப்பு மனநிலையில் உள்ளதால் ஈரானில் அயதுல்லா அலி கமேனிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில தான் இந்த போராட்டத்தின் பின்னணியில் ஈரானின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் தான் ஈரான் மக்களை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வழிநடத்தி வருகிறார். இவரது பேச்சை கேட்டு தான் மக்கள் வீதிகளில் களமிறங்கி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. இந்த ரெசா பஹ்லவி அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 65.
அதாவது கடந்த 1925 முதல் 1979ம் ஆண்டு வரை காலக்கட்டத்தில் ஈரானில் ஆட்சி புரிந்த வம்சத்தின் பெயர் பஹ்லவி. மன்னராட்சி தான் அங்கு நடந்து. கடந்த 1979ம் ஆண்டு மன்னராட்சிக்கு எதிராக புரட்சி வெடித்தது. அப்போது ஈரானை ஆட்சி செய்த மன்னர் பெயர் முகமது ரெசா பஹ்லவி. இவர் வெளிநாட்டு தலைவர்களின் கைப்பாவையாக இருந்தார். குறிப்பாக அமெரிக்காவின் பேச்சை கேட்டு செயல்பட்டு வந்தார். இது ஈரானில் இருந்த பலருக்கும் பிடிக்கவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக ஈரானில் புரட்சி வெடித்தது.
இந்த புரட்சி 1979ம் ஆண்டில் வெடித்தது. ஈரானில் இடதுசாரி அமைப்புகளும், இசுலாமிய அமைப்புகளும், ஈரானிய மாணவர் இயக்கமும் புரட்சியில் ஈடுபட்டன. இந்த புரட்சிக்கு தலைமை தாங்கியவரின் பெயர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி (Ayatollah Ruhollah Khomeini). இந்த புரட்சி வெற்றியும் பெற்றது. மன்னராக இருந்த முகமது ரிசா பஹ்லவி வீழ்த்தப்பட்டார். ஈரானில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அனைவரும் நாடு கடத்தப்பட்டனர். முகமது ரிசா பஹ்லவியின் மகன் தான் ரெசா பஹ்லவி. ஈரானின் பட்டத்து இளவரசான இவர் அமெரிக்காவில் உள்ளார்.
மேலும் 1979 ம் ஆண்டு நடந்த புரட்சியை முன்னின்றி நடத்திய அயதுல்லா ருஹோல்லா கொமேனி ஈரானின் உச்சபட்ச தலைவர் ஆனார். அவரது மறைவை தொடர்ந்து தான் அயதுல்லா அலி கமேனி ஈரானின் உச்சப்பட்ட தலைவரானார். இதனால் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி தொடர்ந்து அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இப்படியான சூழலில் தான் தற்போது ஈரானில் பொதுமக்களை அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக ரெசா பஹ்லவி போராட வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications