டிரம்பை விடுங்க.. ரூ.91 லட்சம் கொடுத்தால் குடியுரிமையை தூக்கிக் கொடுக்கும் நாடு! இது நல்லா இருக்கே
நவ்ரு: டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் தங்கும் வெளிநாட்டினரைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக தங்கள் நாட்டில் தங்குவோரை ராணுவ விமானம் மூலம் கூட நாடுகடத்தி வருகிறது. ஒரு பக்கம் டிரம்ப் அரசு இதுபோன்ற கடுமையான சட்டங்களைப் போட்டு வரும் நிலையில், மற்றொரு நாடு பணத்தை வாங்கிக்கொண்டு தனது குடியுரிமையையே விற்பனை செய்து வருகிறது. எதற்காக இதுபோல செய்கிறார்கள். இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களால் தான் தங்கள் நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படுகிறது என்ற ரேஞ்சில் பேசி வருகிறார். இதனால் வெளிநாட்டினர் அமெரிக்கா செல்வதே சவாலான ஒன்றாக மாறி வருகிறது.

ரூ.91 லட்சம் கொடுத்தால் குடியுரிமை
அதேநேரம் மறுபுறம் இங்கு ஒரு நாடு இந்திய மதிப்பில் வெறும் ரூ.91 லட்சம் கொடுத்தால் குடியுரிமையை வழங்குகிறது. ரூ. 91 லட்சம் அதிகமான தொகை போலத் தோன்றலாம். ஆனால், நாட்டின் குடியுரிமையே கிடைக்கும் என்பதால் ரூ.91 லட்சம் குறைவான தொகையாகவே இருக்கிறது. குடியுரிமையை இப்படித் தூக்கிக் கொடுக்கும் நாடு எது? எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
89 நாடுகளுக்குப் போகலாம்
பசிபிக் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு நவ்ரு.. சுமார் 8 சதுர மைல் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த நாடு தான் 1.05 லட்சம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.91.5 லட்சம் கொடுத்தால் குடியுரிமையை வழங்குகிறது. எது குடியுரிமையையே தருகிறார்களா.. அப்போ அது பின்தங்கிய நாடாகத் தான் இருக்கும்.. அந்த பாஸ்போர்ட்டை வைத்து என்ன செய்ய முடியும் என நினைக்க வேண்டாம். நவ்ரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து அயர்லாந்து, ஹாங்காங், ஐக்கிய அமீரகம், அவ்வளவு ஏன் பிரிட்டன் உள்ளிட்ட 89 நாடுகளுக்கு விசா இல்லாமல் போய் வரலாம்.
என்ன காரணம்?
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் உள்ள மைக்ரோனே என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த சிறிய தீவு நாடு, காலநிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் நீர்மட்டம் உயர்வு, கடலோர அரிப்பு மற்றும் உயரமான புயல் அலைகள் போன்ற அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இதை எதிர்கொள்ளவே இதுபோல கோல்டன் பாஸ்போர்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. குடியுரிமையை விற்பனை செய்வது என்பது நவ்ரு போன்ற சிறிய நாடுகளுக்குப் பொருளாதார ரீதியாக மிகப் பெரியளவில் உதவியாக இருக்கிறதாம்.
அதாவது இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 12,500 தான். காலநிலை மாற்றத்தால் நவ்ரு கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மக்களை உயரமான இடத்தில் குடியேற வைக்கும் அங்கு புதிய வாழ்விடத்தை உருவாக்கவும் நப்ரு அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், இதற்கு சுமார் ரூ.545 கோடி செலவாகும். இதற்காகவே குடியுரிமையை விற்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.
டார்கெட் இதுதான்
கடந்தாண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் வரத் தொடங்கிவிட்டதாம். இந்த ஆண்டு மட்டும் 66 விண்ணப்பங்களைப் பெற நவ்ரு இலக்கு வைத்துள்ளது. மொத்தத்தில் 500 விண்ணப்பங்களைப் பெற அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் தங்களின் லட்சிய திட்டத்திற்குத் தேவையான நிதியைச் சேகரிக்க முடியும் என நவ்ரு அரசு நம்புகிறது.
நவ்ரு கோல்டன் பாஸ்போர்ட்
அதேநேரம் இதுபோன்ற கோல்டன் பாஸ்போர்ட் திட்டத்தை நவ்ரு கொண்டு வருவது இது முதல்முறை இல்லை. கடந்த 2003ம் ஆண்டிலேயே இதுபோன்ற திட்டத்தை அறிவித்தனர். அப்போது நவ்ரு குடியுரிமை பெற்ற இரண்டு அல்-கொய்தா தீவிரவாதிகள் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அப்போது கோல்டன் பாஸ்போர்ட் திட்டம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் இதுபோல நடக்காமல் இருக்க இந்த முறை கடுமையான பேக் கிரவுண்ட் செக் நடத்தப்படும் என்றும் அதில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே கோல்டன் பாஸ்போர்ட் வழங்கப்படும் என நவ்ரு அறிவித்துள்ளது.
நவ்ரு என்பது பாஸ்பேட் என்ற கெமிக்கல் அதிகம் உள்ள தீவாகும். 1900களின் முற்பகுதியில் இருந்து பாஸ்பேட் வெட்டி எடுக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான நிலங்கள் பாழடைந்து, வாழத் தகுதியற்றதாக உள்ளன. இதனால் நவ்ரு தீவின் 80 சதவீத பகுதி மக்கள் கடல் பகுதியில் வாழ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் கடல் நீர்மட்டம் உயரத் தொடங்கியிருப்பதே பிரச்சினையாக வெடித்துள்ளது












Click it and Unblock the Notifications