இவ்வளவு நடந்தும் இஸ்ரேலை விட்டு தராத அமெரிக்கா.. உண்மையில் என்ன காரணம்! அதிர வைக்கும் பின்னணி
டெல் அவிவ்: காசா மீதும் சரி, ஹிஸ்புல்லா மீதும் சரி அமெரிக்கா பல முறை வேண்டாம் எனச் சொல்லியும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இருப்பினும், அதையும் ஈரான் தாக்க ஆரம்பித்த உடன் இஸ்ரேலுக்குப் பக்க பலமாக முதலில் வந்து நிற்பது அமெரிக்கா தான். இத்தனை நடந்த பிறகும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நிற்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழும். இது குறித்து நாம் பார்க்கலாம்.
ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்திய நிலையில், இப்போது திடீரென ஈரான் நேரடியாக இறங்கி இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. மறுபுறம் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கிறது.

ஆச்சரியம் இல்லை: இஸ்ரேல் மீது வரும் ஏவுகணைகளைச் சுட்டுத் தள்ள அமெரிக்க அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல் தனது எச்சரிக்கைகளைத் தாண்டி தாக்குதல் நடத்திய போதிலும், அமெரிக்கா தனது சப்போர்ட்டை நிறுத்தவே இல்லை. ஆனால், அமெரிக்க- இஸ்ரேல் இடையேயான வரலாற்றைப் பார்க்கும்போது இது ஆச்சரியமல்ல. எத்தனை அதிபர்கள் மாறினாலும், அவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இஸ்ரேல் என்ன செய்தாலும், அதை எல்லாம் தாண்டி 1967 முதல் அமெரிக்கா அதற்குப் பக்க பலமாகவே இருந்துள்ளது.
யூதர்களுக்குத் தனியாக ஒரு தேசம் தேவை என்ற ஐடியாவை அமெரிக்கா எப்போதும் ஆதரித்தே வந்துள்ளது. 1919ல் யூதர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்பதை ஆதரித்து பால்ஃபோர் பிரகடனத்தைப் பிரிட்டன் வெளியிட்டது. இதையடுத்து 2 ஆண்டுகள் கழித்து 1922இல் ஒரு முறை மற்றும் 1944ல் மற்றொரு முறை அமெரிக்க நாடாளுமன்றம் பால்ஃபோர் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்து தீர்மானங்களை நிறைவேற்றியது.
முதல் நாடு: மேலும், 1948இல் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது அதை அங்கீகரித்த முதல் நாடு அமெரிக்கா ஆகும். அதுவும் இஸ்ரேல் தன்னை தனி நாடாக பிரகடனப்படுத்தி அடுத்த 11வது நிமிடம் அமெரிக்கா அதை அங்கீகரித்தது. இப்படி தொடக்கம் முதலே அமெரிக்கா இஸ்ரேலை ஆதரித்து வந்தாலும் சூயஸ் போர் உள்ளிட்ட ஓரிரு விஷயங்களில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்தது.
அதேநேரம் 1967ல் நடந்த ஆறு நாள் போர் இஸ்ரேல் மீதான பார்வையை அமெரிக்கா மொத்தமாக மாற்றக் காரணமாக இருந்தது. அந்த நேரத்தில் வியட்நாம் போரில் அமெரிக்கா திக்கித் திணறி நின்றது. ஆனால், வெறும் ஆறே நாட்களில் ஜோர்டான், சிரியா மற்றும் எகிப்தை தோற்கடித்து சத்தமே இல்லாமல் பல பகுதிகளைக் கைப்பற்றியது இஸ்ரேல். இத்தனைக்கும் அமெரிக்காவின் எந்தப் பெரிய உதவியும் இல்லாமல் இஸ்ரேல் அரபு நாடுகளை வீழ்த்தி இருந்தது. இவை அனைத்தையும் வெறும் 6 நாட்களில் செய்து காட்டி இருந்தது.
இதுதான் மிக முக்கியம்" இதில் முக்கியமானது என்னவென்றால் இஸ்ரேல் வீழ்த்திய அரபு நாடுகளில் இரண்டு, எகிப்து மற்றும் சிரியா, சோவியத் நட்பு நாடுகள் ஆகும். மேற்கு ஆசியாவில் சோவியத் விரிவாக்கத்தைத் தடுக்கும் சரியான ஆள் இஸ்ரேல் தான் என்று அமெரிக்கா பார்க்கத் தொடங்கியது. அன்று இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்கிறது. இன்று அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளியாக இஸ்ரேல் இருக்கிறது.
1967 முதல் பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து வந்தாலும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நிபந்தனையற்ற முறையில் நிதி, ராணுவ மற்றும் அரசியல் ரீதியான ஆதரவை வழங்குகிறது. இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருந்தாலும், அமெரிக்கா ஆதரவு இருப்பதால் எந்தவொரு பொருளாதாரத் தடைகளையோ பின்னடைவையோ அது சந்தித்ததே இல்லை.
உதவிகள்: இப்போது அமெரிக்காவின் உதவியைப் பெறும் மிகப்பெரிய நாடாக இஸ்ரேல் இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் இதுவரை $158 பில்லியன் உதவியைப் பெற்றுள்ளது. தற்போது, இஸ்ரேலின் மொத்த ராணுவ வரவு பட்ஜெட்டில் சுமார் 16% அமெரிக்காவில் இருந்து தான் வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகமும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மேலும், ஐநாவின் இஸ்ரேலுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை 50 முறைக்கு மேல் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்துள்ளது.
எல்லாத்தையும் விட இது முக்கியம்: இஸ்ரேலின் இந்த நிபந்தனையற்ற அமெரிக்கா ஆதரவுக்கு மற்றொரு மிக முக்கிய காரணமும் இருக்கிறது. அமெரிக்கா என்ன தான் ஒரு கிறிஸ்துவ நாடாக இருந்தாலும், அங்குள்ள பெரும் செல்வந்தர்கள், முக்கிய அதிகார மட்டத்தில் இருப்போர் யூதர்கள். எனவே, அவர்களின் லாபியும் இதில் முக்கிய பங்காற்றுகிறது. இதன் காரணமாகவே என்ன நடந்தாலும் அமெரிக்காவின் ஆதரவு இஸ்ரேலுக்குத் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications