உலகின் மிக பழமையான 'பூமராங்' இதுதான்! ஆனால்.. வீசினால் மீண்டும் கைகளுக்கு திரும்ப வராது
வார்சா: வானத்தில் வீசினால் மீண்டும் திரும்பி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் 'பூமராங்'. பழங்காலத்தில் இதை வேட்டைக்கு பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால், உலகின் மிகவும் பழமையான 'பூமராங்கை' எடுத்து வீசினால், அது திரும்ப வராது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 1985ம் ஆண்டு போலந்தில் உள்ள ஒரு குகையில் நடத்தப்பட்ட ஆய்வில் 'பூமராங்' கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக 'பூமராங்' ஆஸ்திரேலியாவுடன் தொடர்புடையது. ஆனால், அந்த தென் மூலைியிலிருந்து வடக்கில் ஏதோ ஒரு மூலையில் உள்ள போலாந்துக்கு இது எப்படி வந்தது என்பது மிகப்பெரிய கேள்வி.

உலகின் மிகப்பழைய பூமராங்
கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் விடை கிடைக்குமா? ஆய்வு செய்ய வேண்டும் அல்லவா! அப்படியாக விஞ்ஞானிகள் போலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 'பூமராங்கை' ஆய்வு செய்திருக்கின்றனர். இதில் இரண்டு விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
1. மாமத் யானையின் தந்தத்திலிருந்து இந்த 'பூமராங்' செய்யப்பட்டிருக்கிறது
2. இதை வீசினால் திரும்ப வராது
மாமத் தந்தம்
முதல் விஷயத்தை பற்றி பார்ப்போம். இப்போது இருக்கும் யானைகளுக்கு மூதாதையர்கள்தான் இந்த மாமத்கள். ஆதிகாலத்தில் வாழ்ந்த இது, பல காரணங்களுக்காக அப்போதே அழிந்துவிட்டது. இந்த யானையின் தந்தத்தை பயன்படுத்தி பூமராங் செய்யப்பட்டிருக்கிறது என்பது மிகப்பெரிய விஷயம். இந்த வகை யானைகள் ஆக்ரோஷமானவை. பக்கத்தில் யாரையும் நெருங்கவிடாது. ஆனாலும், நம்மவர்கள் அதை அடித்து, துவைத்து வேட்டையாடி, திண்று முடித்துவிட்டு, தந்தத்தை வைத்து பூமராங்கை செய்திருக்கிறார்கள்.
சிறந்த வேட்டையாடிகள் மனிதர்கள்
அந்த வகையில் நாம் மிகப்பெரிய வேட்டையாடிகள் என்பது நிரூபணமாகியிருக்கிறது. அதேநேரம், வேட்டைக்கு கருவியை தயாரித்து பயன்படுத்தும் அளவுக்கு நமது மூளை அப்போதே வளர்ந்துவிட்டது என்பதும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். இந்த பூமராங்கின் வயது 30,000 ஆண்டுகளாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்ததில் இதன் வயது 39,000 முதல் 42,000 ஆண்டுகளாக இருக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
வியக்க வைக்கும் உண்மை
"42,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ செப்பியன்ஸ் இன மனிதர்கள், விலங்குகளை வேட்டையாடுவதற்கு ஏற்ற ஒரு சரியான பொருளை வடிவமைக்கும் அறிவைப் பெற்றிருந்தது வியக்கத்தக்கது. இது மனிதர்களின் திறனை எடுத்துக்காட்டுகிறது" என்று இத்தாலியின் போலோக்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சஹ்ரா தலமோ கூறியுள்ளார்.
கசப்பான யதார்த்தம்
எல்லாம் ஓகேதான் ஆனால் இதை வீசினால் திரும்ப கைகளுக்கு வராது என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய இரண்டாவது விஷயம். இந்த பூம்ராங் மிகவும் நன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. வலது கை பழக்கம் உள்ள ஒருவர் பயன்படுத்தும் வகையில், இது மெருகூட்டப்பட்டு செதுக்கப்பட்டுள்ளது. பூமராங் திரும்ப வரவேண்டும் எனில் அது காற்றில் பயணிக்க ஏற்ற வடிவமைப்பை பெற்றிருக்க வேண்டும். யானை தந்தத்தை எப்படி வளைக்க முடியும்? எனவே, கிடைத்ததை வைத்து நம்மாட்கள் பூமராங் செய்திருக்கிறார்கள். அந்த காலத்தில் இதை செய்ததே பெரிய விஷயம்.
வேட்டைக்கு பயன்பட்ட பூமராங்
இது வேட்டைக்கு பயன்பட்டிருக்கலாம் அல்லது கலாச்சார மற்றும் கலை நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஒருவேளை, இது ஏதேனும் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூட கருதப்படுகிறது. மேலே சொன்னதை போல பூமராங் ஆஸ்திரேலியாவுடன் தொடர்புடையதாக கருதப்பட்டதாலும், அது போலந்து, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து இப்படி பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், எரிந்தவர் கைகளுக்கே திரும்பி வராத இந்த போலந்து 'பூமராங்' மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications