ஆமாங்க.. நீங்க பிரதமராகும் வரை பாகிஸ்தான் நல்லாத்தான் இருந்தது.. இம்ரான் கான் மாஜி மனைவி நறுக்
இஸ்லாமாபாத்: ‛‛நீங்கள் பிரதமராக இல்லாத பாகிஸ்தான் நன்றாகவே இருந்தது'' என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, அவரது முன்னாள் மனைவி ரேஹம் கான் விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தானில் மொத்தம் 342 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியமைக்க 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2018ல் மக்களவை தேர்தல் நடந்தது.
இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரி இ-இன்ஷெப் கட்சி 155 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

பிரதமர் இம்ரான் கான்
ஆட்சியமைக்க தேவையான 172 இடங்கள் கிடைக்காததால் சிறுகட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். 179 உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார். இந்நிலையில் தான் இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்துள்ளது. இதனால் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்வது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
இதனால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஏப்ரல் 3ல் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதனால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு பிதரமர் பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகின. இதை இம்ரான் கான் மறுத்து உள்ளதோடு, தான் கடைசி பந்து வரை நின்ற விளையாடுவேன் என கூறியுள்ளார்.

ஒன்று பட வேண்டும்
இந்நிலையில் தான் இம்ரான் கானை அவரது முன்னாள் மனைவி ரெஹம் கான் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இம்ரான் ஒரு வரலாறு!! நாம் அனைவரும் புதிய பாகிஸ்தான் ஏற்படுத்தியுள்ள குழப்பத்தை கலைய ஒன்றுபட வேண்டும் என நினைக்கிறேன்'' என்று தெரிவித்து இருந்தார். அதாவது 2018 தேர்தலின்போது புதிய பாகிஸ்தானை உருவாக்குவதாக கூறி இம்ரான் கான் ஆட்சிக்கு வந்தார். இதனை தான் இவ்வாறு விமர்சித்து இருந்தார்.

மறுபடியும் விமர்சனம்
இதையடுத்து நேற்று இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, "என்ன நடந்தாலும் நான் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். நான் ஒரு கிரிக்கெட் வீரர். கடைசி பந்து வரை ஆடுவேன். நான் சிறுவயதில் பார்த்த பாகிஸ்தான் வேறு. இப்போதுள்ள பாகிஸ்தான் வேறு. சிறுவயதில் என்னுடன் பள்ளியில் மலேசிய இளவரசர் படித்தார். தென்கொரியா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு படிக்க வந்தனர். இப்போது நமது தேசம் இழிவுப்படுத்தப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார். இதையும் முன்னாள் மனைவி ரெஹம் கான் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், ‛‛ஆமாம், நீங்கள் பிரதமராக இல்லாதபோது பாகிஸ்தான் நன்றாகவே இருந்தது'' என இம்ரான்கானின் காலை வாரியுள்ளார்.












Click it and Unblock the Notifications