தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால்... கள்ளக்குறிச்சி -கடலூர் போக்குவரத்து துண்டிப்பு.. மக்கள் அவதி..!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தரைப்பாலம் ஒன்று தண்ணீரில் மூழ்கியதால் கடலூருக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் போக்குவரத்துக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். மருந்து வாங்கக் கூட அவசரத்திற்கு அருகாமையில் உள்ள பெரிய ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஏரிகளும், குளங்களும் நிரம்பி வழிகின்றன. இதனிடையே மழை நீர் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை பெய்த தொடர் கனமழை காரணமாக நதியின் ஓடையில் அதிக அளவில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. மேலும் உளுந்தூர்பேட்டையை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்திற்கும் கூ.கள்ளக்குறிச்சி கிராமத்திற்கும் இடையே உள்ள தரைப்பாலம் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கியது.
கரை எது பாலம் எது எனத் தெரியாத வகையில் அங்கு தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி வருகிறது. இதனால் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 அடி உயரத்திற்கு மேல் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் தரைப்பாலத்தை கடக்க அஞ்சுகின்றனர். நீண்ட நாட்களாக தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அரசின் சார்பில் இயக்கப்பட்டு வரும் இரண்டு பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் விருத்தாசலம் மற்றும் உளுந்தூர்பேட்டைக்கு செல்ல முடியாமல் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கிராமமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை கடலூர் இடையே இன்று முதல் நாளை வரை மிக கனமழை இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவதால் நிலைமையை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.












Click it and Unblock the Notifications