'என் புள்ள ஜட்ச் ஆகிட்டான்'.. காஞ்சிபுரம் சலவை தொழிலாளி மகன் இன்று நீதிபதி.. உற்சாகத்தில் தந்தை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சலவை தொழிலாளி மகன் பாலாஜி அண்மையில் நடந்து முடிந்த தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிபதியாகி உள்ளார். இவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தமிழ்நாட்டை போல் கல்விக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் இந்தியாவில் இருக்கிறதா என்பதை கண்டிப்பாக தேடித்தான் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாட்டை ஆண்ட அரசுகளும் சரி கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலைகளில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்கள் கல்வியில் சிறப்பாக படித்து முன்னேற பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான சாமானியர்களின் குழந்தைகள் மிகப்பெரிய அளவில் படித்து முன்னேறி வருகிறார்கள்.
அந்த வகையில் காஞ்சிபுரம் நகரில் உள்ள சேக்குப்பேட்டை சாலியர் தெற்கு தெருவைச் சேர்ந்த சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியை காஞ்சிபுரமே கொண்டாடி வருகிறது. காஞ்சிபுரம் நகரில் உள்ள சேக்குப்பேட்டை சாலியர் தெற்கு தெருவைச் சேர்ந்த சலவை தொழிலாளியான கணேசன் - மேகலா தம்பதியரின் இரண்டாவது மகன் பாலாஜி.
பாலாஜிக்கு சிறுவயது முதலே படிப்பின் மீது தீவிர ஆர்வம் இருந்து வந்துள்ளது,. காஞ்சிபுரத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்தவருக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதற்காக பாலாஜி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார்.
சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுகப்பிரியன் என்பவரிடம் பாலாஜி பணியாற்றி வந்தார். வறுமை ஒரு பக்கம் வாட்டி வந்த நிலையில், எப்படியாவது படித்து நீதிபதியாகவேண்டும் என்று நினைத்துள்ளார். அதற்காக சிவில் நீதிபதி தேர்வினை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த முதன்மை தேர்வினை எழுதி வென்றார். அதில் 12,500 பேரில் ஒருவராக தேர்ச்சி பெற்று நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதி தேர்வில் பங்கேற்றார். வெற்றி பெற்ற 472 பேரில் பாலாஜியும் ஒருவர் ஆவார்.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வில் பாலாஜி சிறப்பாக செயல்பட்டார். இதனால் கடந்த 11ஆம் தேதி வெளியான நிலையில், 237 நபர்களில், பாலாஜியும் சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றது தற்போது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு பாலாஜியின் பெற்றோர் பூரித்து போனார்கள். தினமும் 8 மணி நேரம் படித்து நீதிபதி தேர்வுக்கு தயாரானதாக பாலாஜி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்ச்சி அடைந்திருப்பது காஞ்சிபுரம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மகளான 23 வயதாகும் ஹிமாகிருத்தி என்பவரும் சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த முறை சமானியர்கள் பலர் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நீதிபதிகளாகி இருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications