சிறுமி டான்யாவுக்கு கிடைத்தது மறுவாழ்வு! நேர்ல வந்து பார்க்கிறேன்! போனில் நலம் விசாரித்த முதல்வர்!
காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியிலுள்ள பிரபல தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்ட சிறுமிக்கு 10மணி நேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து தமிழக முதலமைச்சர் சிறுமியின் தாயிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினரின் மூத்த மகளான ஒன்பது வயதான சிறுமி டான்யா அரியவகை முகச் சிதைவு நோயால் பாதிக்கபட்டிருந்தார்.
முக அறுவை சிகிச்சை செய்ய முதல்வர் உதவி செய்யவேண்டும் என்று சிறுமி யின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக பல்வேறு ஊடகங்களில், சமூக வலைதளங்களில் டான்யாவுக்கு உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

முதல்வர் உத்தரவு
எனக்கு விளையாட ஆசையாக உள்ளது. ஆனால், என் கன்னம் இப்படி இருப்பதால், மற்ற நண்பர்கள் என்னுடன் சேர்ந்து விளையாட மறுக்கிறார்கள். எனக்கு முதல்வர் ஐயா உதவவேண்டும் என்று கோரியிருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் 10பேர் கொண்ட மருத்துவக் குழுவினரால் அவசர சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது.

அறுவைச் சிகிச்சை வெற்றி
இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையில் சுமார் 10 மணிநேரமாக நடைபெற்று வந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து அறுவை சிகிச்சை முடிந்து அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியே வந்த சிறுமி டான்யாவை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் நேரில் சந்தித்தார். மேலும் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து அவரை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றி தொடர்ந்து அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

முதல்வர் ஆறுதல்
இந்நிலையில் சிறுமியின் தாய் சௌபாக்கியாவிடம் தமிழக முதலமைச்சர் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார்.மேலும் விரைவில் சிறுமி டான்யாவை நேரில் வந்து சந்திப்பதாகவும், மேற்கொண்டு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் தமிழக அரசு செய்யும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்தார். மேலும் சிறுமியின் தாய் சௌபாக்கியா தன்னுடைய குழந்தை டான்யாவை காப்பாற்றியதற்கு கண்ணீர் மல்க தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

அனைவருக்கும் நன்றி
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசுகையில், ஒவ்வொரு நாளும் தமிழக முதலமைச்சர் சிறுமி உடல் நிலை குறித்த தகவல்களை கேட்டு அறிந்ததாகவும் சிறுமிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் உட்பட அனைத்து உதவிகளையும் செய்ய ஆணையிட்டுள்ளதாகவும் கூறினார். 10 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த மீடியாக்களுக்கும் அவர்கள் நன்றியை தெரிவித்தனர் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications