பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த கயவர்கள்.. வீசிய துர்நாற்றம்.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி
காஞ்சிபுரம்: குடிக்கும் தண்ணீரில் மலத்தையோ, மாட்டு சாணத்தையோ கலக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே திருவந்தார் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்துள்ளனர் கயவர்கள். காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் பூதாகரம் ஆனது. அந்த சம்பவம் நிகழ்ந்து பல மாதங்கள் ஆன பின்னரும் குற்றவாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தற்போது பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் மலத்தை கலந்து வன்மத்தை கக்கி வருகின்றனர் கயவர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே திருவந்தார் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க சென்ற போது துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற உத்தரவிட்டனர். குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யவும் வருவாய் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். பள்ளி வளாகத்தில் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் திருவந்தார் கிராம மக்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனை குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தலைமை ஆசிரியர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். தண்ணீரை சுத்தம் செய்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு சத்துணவு தயார் செய்யும் சமையற்கூட சுவற்றில் மனித மலத்தை கொட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்துள்ளனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications