Thanga Balli: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி மாயம்? மறுக்கும் அறநிலையத் துறை!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் தங்க பல்லி மாயமானதாக சொல்லப்படும் புகாரை அறநிலையத் துறை மறுத்துள்ளது. இது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கொடுக்கப்பட்ட புகாரை தமிழக அரசு மறுத்துள்ளது.
108 திவ்ய தேசங்களில் ஒன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதுடன் அங்கிருக்கும் தங்க பல்லி, வெள்ளி பல்லியை தரிசனம் செய்யவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் தங்க பல்லி, வெள்ளி பல்லி சிலைகளை மாற்றிவிட்டு புதிய சிலைகளை அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி மாயமாகிவிட்டதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ் நரசிம்மன் என்பவர் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சம்பத் தலைமையில் 6-க்கும் மேற்பட்ட போலீஸார், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்து அங்குள்ள சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து கோயிலில் பணிபுரியும் பட்டாச்சாரியார்கள், ஸ்தானிகர்கள், மணியக்காரர், கோயில் நிர்வாக அறங்காவலர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி மாயமானதாகவும் தங்க பல்லி, வெள்ளி பல்லியை கோயில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்த புகார் முற்றிலும் பொய்யானது என அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது போல் பொய் புகார் அளித்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இந்த தங்க பல்லியை தொட்டு தரிசனம் செய்பவர்களுக்கு பல்லி தோஷம் நீங்கும் என்கிறார்கள். கொங்கண தேசத்தில் ச்ருங்கிபேரர் என்பவருக்கு ஹேமன், சுக்லன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் கவுதம முனிவரிடம் வேத பாடம் படித்தனர்.
குருகுல முறைப்படி, தினமும் கவுதமரின் பூஜைக்கு தேவையான நீரையும் யாகத்திற்கு தேவையான குச்சிகளையும் சேகரித்து வருவது இவர்களது பணியாக இருந்தது. ஒருநாள் இருவரும் குரு முன் வைத்த தீர்த்த குடத்தில் இருந்து இரு பல்லிகள் துள்ளிக் குதித்து வெளியேறின.
இதை கண்ட கவுதமர் கோபமடைந்து, அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சபித்தார். சாபத்தால் அஞ்சிய சீடர்கள் இருவரும் குருவிடம் சாப விமோசனம் கேட்டனர். நாம் செய்யும் ஒரு நற்செயலுக்கு ஆயிரம் மடங்கு பலன் தரும் சத்திய விரதம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் சென்று அத்திகிரி மலையில் கோயில் கொண்டுள்ள அருளாளப் பெருமாளான வரதராஜரை நோக்கி தவம் செய்யுங்கள். விரைவில் அவர் உங்களுக்கு சாப விமோசனம் அளிப்பார் என கவுதம முனிவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சாப விமோசனம் பெற்ற சீடர்களின் நினைவாக தங்கம், வெள்ளியினாலான பல்லி உருவங்களை வரதராஜப் பெருமாள் கோயிலில் இந்திரன் பிரதிஷ்டை செய்தார். இவற்றை தொட்டு வணங்குபவர்களுக்கு சகல பாவங்களும் நீங்கும். செல்வம் பெருகும். நோய்கள் தீரும் என இந்திரன் அருள்பாலித்தார்.
இதனால் இன்று வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இந்த பல்லி தரிசனம் செய்கிறார்கள். அப்படிப்பட்ட பல்லியை காணவில்லை என ஒருவர் புகார் கொடுத்ததால் பரபரப்பு எழுந்தது.












Click it and Unblock the Notifications