காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு.. யார் இந்த கணேச சர்மா டிராவிட்?
காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவை பூர்விகமாக கொண்ட கணேச சர்மா டிராவிட் என்பவர் அட்சய திருதியை நாளான இன்று பொறுப்பேற்று கொண்டார். கணேச சர்மாவுக்கு, மடத்தின் தற்போதைய 70 ஆவது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார்.
காஞ்சி சங்கர மடத்தின் 70 ஆவது பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் இருந்து வருகிறார். பீடாதிபதி இருக்கும்போது அங்கு இளைய பீடாதிபதி தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்தபோதே ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், அதன் பிறகு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

விஜயேந்திர சங்கராச்சாரியாருக்கு பிறகு யார் பொறுப்புக்கு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதில், "ஆந்திரா மாநிலத்தின் அன்னவரம் கிராமத்தைச் சேர்ந்த ரிக் வேத அறிஞர் ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் பிரம்ம இளைய மடாதிபதியாக தேர்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கணேச சர்மாவுக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்த திருக்குளத்தில் அட்சய திருதியை நாளான இன்று சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார். தொடர்ந்து, மூலவர் காமாட்சி அம்பிகை தரிசனம் செய்தனர். பின்னர், ஸ்ரீ ஆதிசங்கரர் சந்நிதியில் இளைய மடாதிபதிக்கு ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற தீட்சை நாமம் சூட்டப்பட்டது.
பின்னர், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா திராவிட்டும் ராஜவீதி வழியாக சங்கர மடத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர். மங்கள மேளதாளங்கள் முழங்க இந்த ஊர்வலம் நடைபெற்றது. சங்கர மடத்துக்கு வந்த பின்னர் இளைய மடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71 ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கர மட நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த விழாவைக் காண்பதற்காக கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்தனர்.
யார் இந்த கணேச சர்மா?
கணேச சர்மா அனைத்து வேதங்களிலும் தேர்ச்சி பெற்றவர். தெலங்கானா மாநிலம், ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் பணியாற்றினார். அப்போதிருந்தே காஞ்சி பீடத்தின் ஆசியையும், அருளையும் பெற்றுள்ளார். கணேச சர்மா கடந்த 2001 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தை ஸ்ரீநிவாச சூர்ய சுப்ரமணியம். தாய் அலிவேலு மங்காதேவி ஆவர். அன்னவரம் ஸ்ரீ வீர வெங்கட சத்தியநாராயண சுவாமி கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.
வேதம்
சர்மா கர்நாடகாவில் வேதக் கல்வியை பயின்றார். மேலும் ரிக்வேத அறிஞர் ஸ்ரீ கம்மம்பள்ளி சதீஷாச்சாரியாரிடம் வேதம் மற்றும் சமஸ்கிருத கல்வி பயின்றார். கடந்த 2009 ஆம் ஆண்டு காஞ்சி பீட சங்கராச்சாரியார் தரிசனத்துக்கு சென்றனர். அங்கு கிடைத்த வழிநடத்துதலில் அவர் தொடர்ந்து வேதம் பயின்றார்.
பயிற்சி
பிறகு 12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் கும்பகோணம் மகாமகத்தில், மீண்டும் சங்காரச்சாரியாரிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து விஜயேந்திர சங்கராச்சாரியாரின் வழிநடத்துலில் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு, சங்கர மடம் சார்ந்த உற்சவங்களில் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications