பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது.. கிராம சபை கூட்டத்தில் 8-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகானபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 752 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று ஏகனாபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை 8 கிராம சபை கூட்டத்தில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இங்கு விமான நிலையம் அமைக்க கூடாது என்று பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கிட்டத்தட்ட 752 நாட்களாக ஏகனாபுரம் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதிகாரிகளும் விமான நிலையம் அமைப்பதற்கு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அந்த கிராம மக்கள் விளை நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்க வேண்டாம் என்று உறுதியாக கூறி வருகின்றனர்.
இதுவரை ஏகானபுரம் கிராம ஊராட்சியில் 13 கிராம சபை கூட்டங்கள் நடந்திருக்கிறது. இதில், 7 கிராம சபைக்கூடத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளது. இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஏகானபுரம் ஊராட்சியில் நடந்தது. இந்த கிராம சபைக் கூட்டத்திலும் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மீண்டும் ஏகானபுரம் மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
இதன்மூலம் 8 வது முறையாக பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விளை நிலங்களை அழித்து இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டாம் என்ற அந்த கிராம மக்கள், வளர்ச்சி பணிகள் எதுவும் இங்கு கொண்டு வரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு வைத்தனர். தொடர்ந்து அதிகாரிகளும் இது தொடர்பாக பேசி வருகிறார்கள்.
சென்னை விமான நிலையம் போல காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள 20 கிராமங்களில் சுமார் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ஆம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பரந்தூர், வளத்தூர், பொடவூர், தண்டலம், நல்வாய், மடப்புரம், ஏகானபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நில அளவீடு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. குடியிருப்புகள், விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் வருவாய்த்துறையும் ஈடுபட்டுள்ளது. ஆனால் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டார மக்கள் கடந்த 752 நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மொட்டையடிக்கும் போராட்டம், திருவோடு ஏந்தும் போராட்டம், அலுவலகம் முற்றுகை போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் அரசு இதனை கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து நிலம் கையகப்படுத்தும் பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தான் இன்று நடந்த கிராம சபை கூட்டத்திலும், பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.












Click it and Unblock the Notifications