2026ல் பாருங்க.. தமிழகத்தில் திராவிட கட்சிகளே இல்லாத ஆட்சி! அண்ணாமலை பேச்சு! ஆஹா ஒருவேளை இருக்குமோ
காஞ்சிபுரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். பாஜக இல்லை என்றால் அதிமுகவால் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூடப் பெற முடியாது என்ற அண்ணாமலை, வரும் 2026ல் திராவிட கட்சிகள் இல்லாத அரசு தமிழகத்தில் அமையும் என்றும் தெரிவித்தார்.
பாஜக சார்பில் காஞ்சிபுரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் & கருத்தரங்கம் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

முதலில் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்குச் சென்ற அண்ணாமலை, அங்கே மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். அதன் பின்னரே பாஜக கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
அண்ணாமலை: அந்த கருத்தரங்கு முடிந்த உடன் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில அண்ணாமலை, "அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேவை இல்லாத கருத்துகளை.. வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். அரசியல் பெருந்தன்மை இல்லாமல் அவரது பேச்சு இருக்கிறது. அவரது பேச்சுக்குப் பதில் அளித்தால் அது தவறாகப் போய்விடும். பாஜக குறித்து மக்களுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் எதற்காக உழைக்கிறோம். எதற்காகக் களத்தில் இருக்கிறோம் என்பது மக்களுக்குத் தெரியும்.
தமிழ்நாட்டிற்கு எத்தகைய ஆட்சியைத் தர வேண்டும் என்பதற்காக பாஜகவினர் உழைக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு நன்றாகவே தெரியும். இவை எல்லாம் தெரிந்ததாலேயே பாஜகவில் இருந்து 4 எம்எல்ஏக்களை தேர்வு செய்துள்ளனர். இந்த 4 எம்எல்ஏக்கள் அதிமுகவால்தான் பாஜகவுக்குக் கிடைத்ததாகக் கூறுகிறார். 2024 சட்டசபைத் தேர்தலில் அதிமுக எத்தனை வாக்கு சதவிகிதத்தைப் பெற்றுள்ளது என்பதை முதலில் பாருங்கள்.. எத்தனை இடங்களில் டெபாசிட் கூட இல்லை, எத்தனை இடங்களில் 3வது இடம், எத்தனை தொகுதிகளில் 4வது இடம் என்பதைப் பார்த்தால் புரியும். எனவே, இதெல்லாம் தேவையில்லாத பேச்சு.
எதிர்க்கட்சி அந்தஸ்து: கூட்டணியில் இருந்த போது பாஜக வெற்றிக்கு அதிமுகவினர் உழைத்துள்ளனர். அதேபோல அதிமுக வெற்றிக்கும் கூட பாஜகவினர் உழைத்துள்ளனர். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கூட்டணியில் பாஜக இல்லை என்றால் இத்தனை சீட்களில் வென்றிருக்க முடியாது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெற்றிருக்க முடியாது..
திராவிட கட்சிகள் இல்லாமல்: நிலைமை அப்படியிருக்கும் போது பாஜக வெற்றிக்கு அதிமுக தான் காரணம் என்று அக்கட்சித் தலைவர்கள் சொல்வதைப் பார்த்துப் பரிதாபப்பட மட்டும் முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கடைசியாகக் காமராஜர் ஆட்சியில் தான் ஊழலற்ற அரசு இருந்தது. அதன் பிறகு அமைந்த அனைத்து அரசுகளிலும் எல்லா இடங்களிலும் ஊழல் எட்டிப் பார்த்து.. தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் இல்லாமல் பாஜக வரும் போதுதான் ஊழலை ஒழிக்க முடியும்.
அதற்கான வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். அதற்கு முத்தாய்ப்பான கூட்டணியை லோக்சபா தேர்தலுக்கு உருவாக்கினோம். 2026ம் ஆண்டில் நிச்சயம் திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டணி தான் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும். அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை" என்றார்.
தமிழிசை: முன்னதாக இதில் பேசிய பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், "மம்தா ஆளும் மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதை எதிர்த்துப் போராடும் மக்களையும் அவரது கட்சியினர் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் ராகுல் ஏன் மவுனமாக இருக்கிறார். ராகுல் காந்தி ஏன் இன்னும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவில்லை?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications