பரந்தூர் விவகாரம்.. நள்ளிரவு வரை நீடித்த குழப்பம்.. விஜய் பிளானில் கடைசி நிமிடத்தில் மாற்றம்!
காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்தை எதிர்த்துப் போராடி வரும் மக்களை இன்று (திங்கள்) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்கவுள்ளார். இருப்பினும், அவர் எந்த இடத்தில் வைத்துப் போராடும் நடத்தும் மக்களைச் சந்திக்கவுள்ளார் என்பதில் நள்ளிரவு வரை குழப்பம் நீடித்தது. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தவெக் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்ற நிலையில், நள்ளிரவுக்கு பிறகே குழப்பம் தீர்ந்தது.
சென்னையில் மீனம்பாக்கத்தில் விமான நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தீவிர ஆய்வுக்குப் பிறகு பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும், விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். சுமார் 900 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் தொடர்கிறது. பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்தாலும் நிலம் கையகப்படுத்தும் பணிகளும் மற்றொரு புறம் நடந்து வருகிறது.
தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், இன்று (திங்கள்) பரந்தூர் மக்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது.. இதற்காக ஏற்கனவே காஞ்சிபுரம் போலீசாரிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போது வரை பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவை விஜய் சந்திக்க அனுமதி வழங்குவதில் குழப்பம் நீடித்து வருகிறது. விமான நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் எந்த இடத்தில் விஜய் சந்திப்பார் என்பதில் குழப்பம் தொடர்கிறது. 900 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வரும் அம்பேத்கர் திடல் அருகிலேயே வைத்து மக்கள் சந்திக்க வேண்டும் என்பது தவெக தரப்பினரின் விருப்பம். இதற்காகவே அனுமதியும் கோரியிருந்தனர்.
இருப்பினும், அங்குச் சந்தித்தால் பாதுகாப்பு சிக்கல் எழக்கூடும் என்பதால் தனியார் மண்டபத்தில் தான் அனுமதி வழங்க முடியும் என போலீசார் திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்றார். அம்பேத்கர் திடலிலேயே அனுமதி வழங்குவது தொடர்பாக அவர் எஸ்பி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது ஒரு பக்கம் இருக்க அம்பேத்கர் திடலில் விஜய் வருகைக்காக ஏற்பாடுகள் நடந்த வந்த நிலையில், அதை நிறுத்த போலீசார் அறிவுறுத்தினர். அங்கு அமைக்கப்பட்ட பந்தலையும் போலீசார் அகற்றக் கூறிய நிலையில், பந்தல் போடும் பணிகள் இரவில் நிறுத்தப்பட்டனர்.
நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு விஜய் தனியார் மண்டபத்திலேயே போராடும் மக்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொடவூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை தவெக தலைவர் விஜய் சந்திப்பார் என்றும் பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை மக்களைச் சந்திக்க போலீசார் ஒப்புதல் அளித்துள்ளதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications