வசமாக சிக்கும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ.. மேலும் 4 பெண்கள் போலீசாரிடம் புகார்
குமரி பாதிரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி: ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில் தலைமறைவாக இருந்த குமரி பாதிரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ. பெனடிக்ட் ஆன்றோ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பாதிரியாராக பணியாற்றி உள்ளார்.
இந்த சூழலில் இளம்பெண்கள் சிலருடன் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில்
பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் இளம்பெண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வாட்ஸ் அப் காலில் நிர்வாணமாக பேசிய காட்சிகள் என முகம் சுளிக்கும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதுமாக இருந்தது. பாதிரியார் பெனடிக் ஆன்றோ ஆலய பணிக்காக மதுரை, சென்னை, பெங்களூரு என பல இடங்களுக்கு சென்று வந்ததும் அங்கு வரும் இளம்பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தியதும் அவர்களையும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

5 பிரிவுகளில் வழக்கு
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த 18-வயதான இளம்பெண் ஒருவர் சைபர் கிரைம் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்தார். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ சமூக வலைத்தளம் மூலமாக தன்னிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதோடு மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

நாகர்கோவிலில் வைத்து கைது
இதற்கிடையே, போலீசாருக்கு பயந்து பாதிரியார் பெனடிக் ஆன்றோ தலைமறைவானார். பாதிரியாரை கேரளா, பெங்களூரு என பல இடங்களில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலில் பதுங்கியிருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ போலீசார் வருவதை அறிந்து கேரளாவுக்கு தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. போலீசாரிடம் இருந்து தப்பிக்க தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருந்த பாதிரியார் பெனெடிக்ட் ஆன்றோ நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பதுங்கியிருந்த போது போலீசாரிடம் சிக்கினார்.

ஒருசில கேள்விக்கு மட்டுமே பதில்
நாகர்கோவிலில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்திற்கு பாதிரியார் பெனடிக் ஆன்றோவை அழைத்து வந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பெரும்பாலான கேள்விகளுக்கு மவுனம் காத்த பாதிரியார் பெனடிக் ஆன்றோ ஒரு சில கேள்விக்கு மட்டும் பதிலளித்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் 4 பெண்கள் புகார்
பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்கலாம் என்றும் புகார் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படுமெனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications