எச்சரித்தும் கேட்காத மக்கள்.. குமரி அருகே பொங்கிய கடல்.. தந்தை கண்முன்னே குழந்தையை இழுத்துப்போன அலை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி 7 வயது குழந்தை மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது தேங்காய்பட்டினம் கடற்கரை. தென்னை மரங்கள் நிறைந்த இந்த கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமானது. தற்போது கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தேங்காய்பட்டினம் கடற்கரைக்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையியில் தேங்காய்பட்டினம் கடற்கரையில் பிரேமதாஸ் என்பவர் தனது 7 வயது மகள் ஆதிஷாவுடன் கடற்கரையில் நின்றபோது இருவரும் ராட்சத அலையில் சிக்கினர். பிரேமதாஸை அருகில் இருந்த மக்கள் மீட்ட நிலையில் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி ஆதிஷா மாயமானார்.
ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி ஆதிஷாவை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 7 வயது பெண் குழந்தை ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில், குறிப்பாக தென் தமிழக கடலோரங்களில் இன்று மாலை வரை ராட்சத அலைகள் எழும் என்றும், கடல் கொந்தளிப்பான நிலையில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications