தீஞ்ச முட்டையை குழந்தைக்கு தந்த கன்னியாகுமரி அரசு அங்கன்வாடி ஊழியர்! "சரி விடு" சாப்பிட்டுட்டே பதில்
கன்னியாகுமரி: "தெரியாமல் நடந்துடுச்சு..ப்பா.. நான் வேற முட்டை தர்றேன்.. பிரச்சனையை பெரிசு பண்ணாதீங்க.. நான் ஒத்தையிலே இருக்கிறேன், பிள்ளைகளையும் பாக்கணும், சமையலையும் பார்க்கணும். இப்ப என்ன என்னை நீங்க அடிக்க போறீங்களா? கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுக்க போறீங்களா? கொடு.. எனக்கு பிரச்சனை கிடையாது" என்று கன்னியாகுமரி அரசு அங்கன்வாடி பெண் ஊழியர் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. என்ன நடந்தது?
பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டும், நன்மைகளை கருத்தில் கொண்டும், எத்தனையோ விதமான வசதிகளை தமிழக அரசு செய்து தந்து வருகிறது.

இவைகளை தொடர்ந்து கண்காணித்து, பராமரித்து, பாதுகாக்கும் பொறுப்புகள் அத்தனை அரசு ஊழியர்களுக்கும் உள்ளது.. ஆனாலும் ஒருசில ஊழியர்களும், அதிகாரிகளும் இதுபோன்ற செயல்களில் அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது.
முட்டைகள் எத்தனை
எனவேதான், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் நேரடியாகவே திடீர் ஆய்வுகளில் ஈடுபடுகிறார்கள்.. சமீபத்தில்கூட, மேற்கு ஒன்றியம் மேல்அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு திமுக எம்எல்ஏவான AP நந்தகுமார், திடீரென அந்த பள்ளியின் கிச்சனுக்குள் நுழைந்தார்.. அங்கே மாணவர்களுக்கு தூக்குவாளியில் வேக வைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையை பார்த்தார்.
இதில் எத்தனை முட்டை உள்ளது? என்று நந்தகுமார் கேட்க, 240 என்று ஊழியர்கள் பதில் சொன்னார்கள்.,. உடனே 240 முட்டைகளும் இருக்கிறதா? எனக்கு இந்த முட்டைகளை எண்ணி காட்டுங்க" என்றார்.
கேஸ் ஸ்டவ் எங்கே?
பிறகு சமையலுக்கு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை பார்த்து, இதையெல்லாம் சுத்தமா வெச்சுக்க மாட்டீங்களா? அடுப்புல ஏன் விறகு எரியுது? கேஸ் ஸ்டவ்வில்தானே சமைக்கறீங்க? என்றார். அதற்கு ஒரு ஊழியர், கேஸ் தீர்ந்துபோயிடுச்சு சார் என்றார்..
இதைக்கேட்டு கோபப்பட்ட நந்தகுமார், "கேஸ் இல்லையா? மலை மேலேயே இந்த ஸ்கூல் இருக்கு? இது அருமையான ஊர்.. இந்த ஊருக்கு இரட்டை சாலை போடப்பட்டிருக்கு.. சிலிண்டர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.. கேஸ் இல்லைன்னா என்ன அர்த்தம்? 2 நாளில் இந்த கிச்சனுக்கு வெள்ளை அடித்திருக்க வேண்டும். இப்படி கரி படிந்த ரூமில் சமைப்பதை குழந்தைகள் எப்படி சாப்பிடுவார்கள்?" என்று வார்னிங் தந்துவிட்டு போனது நினைவிருக்கலாம்.
அந்தவகையில் குழந்தைகள் சாப்பிடக்கூடிய உணவு என்பதால், சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், எம்பிக்களும், அதிகாரிகளும், தமிழகம் முழுவதுமே பள்ளிகளில் அதிரடி ஆய்வுகளை செய்து வருகிறார்கள்.
அரசு குழந்தைகள் மையம்
இப்படிப்பட்ட சூழலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. திங்கள்நகர் அருகே உள்ளது மேக்கன்கரை என்ற ஊர்.. இங்கு தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் சுற்றுவட்டார பகுதியிலிருந்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள்.. ஆனால் இந்த குழந்தைகளை கண்காணிக்க போதுமான ஊழியர்கள் இல்லை என்றே கூறப்படுகிறது. இப்போதுள்ள 20 குழந்தைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு ஊழியர் மட்டுமே பணியாற்றி வருவதாகவும் தெரிகிறது.
கன்னியாகுமரி அரசு அங்கன்வாடி
இப்படிப்பட்ட சூழலில், திடீர் புகார் ஒன்று இந்த குழந்தைகள் மையத்தில் வெடித்துள்ளது.. அதாவது கொடுமுட்டி பகுதியை சேர்ந்த அனீஷ் - ரம்யா தம்பதியரின் குழந்தை இந்த மையத்தில் பயன்பெற்று வருகிறது.
கடந்த திங்கள்கிழமை மதியம் தம்பதி இருவரும், தங்களது குழந்தையை அழைத்துசெல்ல வந்திருக்கிறார்கள்.. அப்போது குழந்தைக்கு மதியம் வழங்கப்பட்டிருந்த முட்டை தீய்ந்து போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீஞ்ச முட்டை
உடனே எரிந்து கருகி கிடந்த முட்டையை எடுத்து, அங்கன்வாடி ஊழியரிடம் காட்டி இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் அனீஷ்.. இதற்கு அங்கான்வாடி ஊழியர், இதை பெரிசு படுத்தாதீங்க என்று பதிலளித்துள்ளார். இந்த காட்சி வீடியோவில் எடுக்கப்பட்டு சோஷியல் மீடியாவிலும் பரவி வருகிறது..
அந்த வீடியோவில் அனீஷ், "முட்டை இப்படி தீஞ்சு போயிருக்கு.. இப்படித்தான் பிள்ளைகளுக்கு தருவீங்களா? இதை குழந்தை உடைத்து சாப்பிட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? அங்கன்வாடியில் குழந்தைகளை எதுக்கு விட்டுட்டு போறோம்?" என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்.
ஒத்தையிலே இருக்கேன்
அதற்கு அங்கன்வாடி பெண் ஊழியர், டிபன் பாக்ஸில் தன்னுடைய சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டே, "தெரியாமல் நடந்துடுச்சு..ப்பா.. நான் வேற முட்டை தர்றேன்.. பிரச்சனையை பெரிசு பண்ணாதீங்க.. நான் ஒத்தையிலே இருக்கிறேன், பிள்ளைகளையும் பாக்கணும், சமையலையும் பார்க்கணும்.
இப்ப என்ன என்னை நீங்க அடிக்க போறீங்களா? கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுக்க போறீங்களா? கொடு.. எனக்கு பிரச்சனை கிடையாது..
நான் உங்ககிட்ட பெருசா பேச வரல... நான் செஞ்சது தப்பு தான்.. இதுக்கு முன்னாடி இப்படி நடந்ததா? இந்த முறை தெரியாமல் நடந்துடுச்சு.. இதுக்கு மேல நான் உன்கிட்ட பேச மாட்டேன்" என்று சொல்லி கொண்டே சாப்பிடுகிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications