தமிழ் பண்பாட்டின் எதிரி திமுகதான்.. ராமர் கோவில் நிகழ்ச்சியை பார்க்க விடவில்லை.. மோடி சரமாரி தாக்கு
கன்னியாகுமரி: திமுக தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி. சாதாரண எதிரி அல்ல.. நம்முடைய கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற எதிரி என்று இன்று கன்னியாகுமரியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. நாளை தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்ற தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்தார்.

திமுக தமிழ்நாட்டின் எதிரி: இதனை தொடர்ந்து பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ஜல்லிக்கட்டை முழு உற்சாகத்துடன் தமிழகம் மீண்டும் கொண்டாட ஏற்பாடுகளை செய்தது நம்ம பாஜக அரசு என்றும், தமிழகத்தின் எந்த ஒரு சிறப்பம்சமாக இருந்தாலும் சரி மோடி இருக்கும் வரை அதை யாரும் அசைக்க முடியாது என்று பிரதமர் மோடி பேசினார்.
கூட்டத்தில் மோடி பேசியதாவது:- திமுக தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி. சாதாரண எதிரி அல்ல.. நம்முடைய கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற எதிரி. அயோத்தியில் ராம் மந்திர் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு தமிழகம் வந்து இங்கே இருக்கிற பழமையான கோவிலுக்கும், புனித தலத்திற்கும் சென்று வழிபட்டேன். ஆனால் திமுக அரசு என்ன செய்தது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது: அயோத்தியில் நடந்த கும்பாபிஷேக நிகழ்சியை பார்க்க கூட அவர்கள் யாருக்கும் விருப்பம் இல்லை. இது மட்டுமின்றி தமிழகத்தில் அயோத்தி கும்பாபிஷேக நிகழ்ச்சியை பார்ப்பவர்களை கூட பார்க்கவிடாமல் தடை விதிக்க முயற்சித்தனர். அவ்வளவு வெறுப்பு. உச்ச நீதிமன்றமே தமிழக அரசை தண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழகத்தின் கலாசாரம் மீதும் பண்பாட்டின் மீதும் பாரம்பரியத்தின் மீதும் எப்போது திமுக வெறுப்பினை கக்கி கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் அடையாளத்தை பெருமையை பாதுகாக்க என்றும் முன்னனியில் பாஜக உள்ளது. அவர்களின் பேச்சுக்களையும், தூற்றல்களையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த திமுக - காங்கிரஸ் அரசு மவுனம் காத்தது. தமிழகத்தின் கலாச்சாரத்தை, பாரம்பரிய விளையாட்டை அழிக்க நினைத்தது.
இது மோடியின் கியாரண்டி: ஜல்லிக்கட்டை முழு உற்சாகத்துடன் தமிழகம் மீண்டும் கொண்டாட ஏற்பாடுகளை செய்தது நம்ம பாஜக அரசு. ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பெருமை. ஒரே ஒரு விஷயம் சொல்றேன் நண்பர்களே.. ஜல்லிக்கட்டாக இருந்தாலும் சரி.. தமிழகத்தின் வேறு எந்த பாரம்பரியமாக இருந்தாலும் சரி.. தமிழகத்தின் எந்த ஒரு சிறப்பம்சமாக இருந்தாலும் சரி மோடி இருக்கும் வரை அதை யாரும் அசைக்க முடியாது.
புதிய பாராளுமன்றம் கட்டி அங்கே ஒரு செங்கோலை நிறுவினோம். தமிழகர்களின் பெருமை, தமிழக மக்களின் பெருமை, தமிழ் மன்னர்களின் பெருமையை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் எப்போதுமே சொல்கிற மாதிரி நிறுவியுருந்தோம். இதனை கூட திமுகவினர் புறக்கணித்தார்கள். இதுபோன்ற தமிழர்களின் பெருமையை யாரும் புறக்கணிக்க முடியாது. அப்படி புறக்கணிக்க இந்த மோடி அனுமதிக்கமாட்டான். இது மோடியின் கியாரண்டி..
எப்படா வாய்ப்பு கிடைக்கும் என: கன்னியாகுமரி எப்போதுமே பாஜகவுக்கு ஏராளமான அன்பை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. உங்கள் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் திமுக காங்கிரசின் இந்தியா கூட்டணி எப்படா இங்கு வாய்ப்பு கிடைக்கும், இங்குள்ள மக்களை சுரண்டலாம் என்று காத்து கிடக்கிறது. நீங்க அவர்களது நடவடிக்கைகளை எல்லாம் கடந்த 20 ஆண்டுகளாக ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து பார்த்தால் அவர்களது எண்ணம் உங்களுக்கு புலப்படும்.
ஆனால் வாஜ்பாய் வடக்கு தெற்கு வழித்தடத்திற்கு ஒரு அடித்தளம் அமைத்து கொடுத்தார். கன்னியாகுமரி நரிக்குலம் பாலம் பல ஆண்டுகளாக அவர்கள் நிறைவேற்றாமல் வைத்திருந்தார்கள். 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அதை நாங்கள் நிறைவேற்றினோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications