விடிய விடிய போதை ஆட்டம்.. கன்னியாகுமரி ரிசார்ட்டில் பர்த்டே பார்ட்டி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் உள்ள ராமனாதிச்சன்புதூரில் தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், வெளிநாட்டு மது வகைகள், கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்றவற்றைக் கொண்டு விடிய விடிய போதை விருந்து நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விழாவில், இளைஞர்கள், இளம்பெண்கள் என 80 பேர் கலந்துகொண்டுள்ளனர். போதைப் பொருள் வைத்திருந்த 8 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 70 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்களைக் குறிவைத்து போதைப் பொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் போதைப் பொருள் புழக்கமும், அதனால் சமூக விரோத சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், கன்னியாகுமரியில் இளைஞர்கள், இளம்பெண்கள், வெளிநாட்டினர் என 80 பேர் பங்கேற்ற பிறந்த நாள் பார்ட்டியில் விடிய விடிய தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களைக் கொண்டு விருந்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள ராமனாதிச்சன்புதூரில் பிரைவேட் சொகுசு ரிசார்ட் ஒன்று உள்ளது. இயற்கை எழில் கொட்சும் ரம்மியமான பகுதியில் அமைந்துள்ள இந்த ரிசார்ட்டில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவது வழக்கும். இங்கு பிறந்த நாள் விழா போன்ற தனியார் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மகளின் பிறந்த நாளை நடத்த திட்டமிட்டுள்ளார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தனது நண்பர்கள், உறவினர்களுக்கு இன்ஸ்டாகிராம், முகநூல் மூலமாக அழைப்பு விடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜப்பான், இங்கிலாந்து, போர்ச்சுக்கல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் என 80 பேர் இந்த விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மெத்தபெட்டமைன், கஞ்சா, போதை மாத்திரைகள், உயர் ரக போதைப் பொருட்கள், வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட்டுகள் போன்றவற்றைக் கொண்டு விடிய விடிய விருந்து வைக்கப்பட்டுள்ளது. தனியார் ரிசார்ட்டில் போதை விருந்து நடத்தப்படுவது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் வெளிநாடு, வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள், இளம்பெண்கள் பங்கேற்றிருந்ததோடு, அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி இருந்ததும் சோதனையில் தெரியவந்துள்ளது. போதை விருந்தில் பயன்படுத்தப்பட்ட 100 கிராம் கஞ்சா, மது பாட்டில்கள், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், போதைப் பொருள் வைத்திருந்ததாக 8 பேரை கைது செய்த போலீஸார், போதைப் பொருள் பயன்படுத்திய வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 70 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications