சீனுக்கு வந்த ஆனந்த் சீனிவாசன்.. செல்பி எடுக்க போட்டி! ராகுல் காந்தியின் கொடியேந்தி ஒற்றுமை யாத்திரை
கன்னியாகுமரி: நேற்று தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொண்டுள்ள பொருளாதார நிபுணரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஆனந்த் சீனிவாசனிடம் செல்பி எடுக்க தொண்டர்கள் அலைமோதினர்.
2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு பக்கம் பாஜக ஆயத்தமாகி இருக்கும் காங்கிரஸ் கட்சியும் மறுபக்கம் உட்கட்சி பூசல்களை களைந்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
ஆனால், சமீபத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய தொடர் போராட்டம் அக்கட்சியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒற்றுமை யாத்திரை
அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க நாடு முழுவதும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவை பெறுக்கவும், ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை நேற்று தொடங்கி இருக்கிறார் ராகுல் காந்தி.

மு.க.ஸ்டாலின்
இதற்காக கன்னியாகுமரி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காந்தி மண்டபத்தில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்தார். இதனை தொடர்ந்து தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து ஒற்றுமை யாத்திரையை அவர் தொடங்கி வைத்தார். இதில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசொக் கெலாட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

12 மாநிலங்கள்
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் எந்த அடையாளத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்றும், தலைவர்களின் புகைப்படங்கள், கட்சியின் கொடி, கை சின்னம் போன்ற எதுவும் இடம்பெறாது என்றும் இது முழுக்க முழுக்க மக்கள் சந்திப்பு பயணம் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டது.

3,570 கிலோ மீட்டர்
380 பேர் கலந்துகொள்ள இருக்கும் இந்த பாத யாத்திரைக்கு மத்தியில் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்க இருக்கிறார்.

ஆனந்த் சீனிவாசன்
இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கலந்துகொண்டார். ராகுல் காந்தி படம் கொண்ட யாத்திரை கொடியை ஏந்தி வேகமாக நடந்து சென்ற அவருடன் கட்சித் தொண்டர்கள் ஓடி வந்து செல்பி எடுத்துக் கொண்டனர். யூடியூப் பேட்டிகள் மூலம் பிரபலமடைந்த ஆனந்த் சீனிவாசனை மீம் டெம்பிளேட்டாக்கி நெட்டிசன்கள் கடந்த மாதம் பல்வேறு பதிவுகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications