கன்னியாகுமரி அரசு பள்ளியில் சேர்ந்தால் தங்க மோதிரம் பரிசு.. இலவச வாகன வசதி.. அசரடித்த மக்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மலைவிளையில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5- ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்றும் இலவச வாகன வசதி செய்து தரப்படும என்றும் முன்னாள் மாணவர்கள் நூதன பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மலைவிளையில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5- ம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது இந்த பள்ளியில் மிக குறைவான மாணவர்களே படிக்கிறார்கள். எனவே மாணவர்களை சேர்க்க நூதன யுக்தியை கையாண்டுள்ளார்கள் முன்னாள் மாணவர்கள். இங்கு படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் என பல்வேறு அரசு துறை அதிகாரிகளாக மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பள்ளியை பார்க்க முடிவெடுத்து அதற்காக செய்து வரும் செயல்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

திருவட்டார் அருகே மலைவிளையில் அரசு தொடக்கப் பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை மிக குறைவாக உள்ளது. தற்போது பள்ளியில் 10 மாணவர்கள் மட்டும் தான் படிக்கிறார்கள். 2 ஆசிரியர்கள் தான் பணியாற்றி வருகிறார்கள். இதே நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் இந்த பள்ளியை வேறு ஒரு பள்ளியுடன் சேர்த்து நடத்த அரசு ஏற்பாடு செய்யும் சூழல் உருவாகியுள்ளது. அத்துடன் இந்த பள்ளி மூடப்படலாம் என்ற அச்சமும் அந்த ஊர் மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு எழுந்துள்ளது.
இந்நிலையில் பள்ளியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். இது தொடர்பான துண்டு பிரசுரம் அச்சடித்து வீடு வீடாக வினியோகம் செய்து நூதன பிரசாரம் செய்துள்ளார்கள்.
அந்த துண்டு பிரசுரத்தில், 'மலைவிளை அரசு தொடக்கப்பள்ளி அடுத்த மாதம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் வருகிற கல்வி ஆண்டில் இந்த பள்ளியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும். பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வர இலவச வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். உயர் தரம் வாய்ந்த கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும். குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பேரில் இசை, ஓவியம், நடனம், யோகா மற்றும் தற்காப்பு கலை ஆகியவை கற்றுக் கொடுக்கவும் அனைத்து வகுப்புகளுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் மாணவர்களின் இந்த முயற்சியை பெற்றோரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள். மேலும் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், அனைத்து பாடப்பிரிவுக்கும் ஆசிரியர்களை நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதேபோல் பல்வேறு ஊர்களிலும் அரசு பள்ளியை காக்க முன்னாள் மாணவர்கள் சத்தமே இல்லாமல் பல விஷயங்களை செய்து வருகிறார்கள்.
தேனி மாவட்டம் சொக்கத்தேவன் பட்டியில் இதேபோல் தான் நிலைமை வந்தது. அங்குள்ள ஊர் மக்கள், தங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளியை காக்க, பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அவர்களே, வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்தார்கள். இப்போது அந்த பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications