கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குனீங்களா? கன்னியாகுமரி மக்களுக்கு இரண்டு சூப்பர் அறிவிப்பு
கன்னியாகுமரி: கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையிலுள்ள தவணை தவறிய பண்ணை சாராக் கடன்கள் மற்றும் இதர நீண்டகால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையிலுள்ள தவணை தவறிய பண்ணை சாராக் கடன்கள் மற்றும் இதர நீண்டகால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் மார்ச் 2-ந் தேதி (நாளை) நடக்கிறது.

கன்னியாகுமரி மண்டலத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், பீப்பிள்ஸ் நகர கூட்டுறவு வங்கி, கல்குளம் நகர கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் மங்களவாடி பல்நோக்கு கூட்டுறவு விவசாய சங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.
31-12-2022 அன்று கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலக்கெடு முழுமையாக முடிவடைந்து தவணை தவறி அரசாணை வெளியிடப்பட்ட நாளான 13-12-2023-ல் நிலுவையில் உள்ள பண்ணைசாராக் கடன்கள் அனைத்தும் இத்திட்டத்தில் தகுதிபெறும். இந்த திட்டத்தின்படி கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாள் முடிய அசலுக்கு 9 சதவீத சாதாரண வட்டி வசூலிக்கப்படும்.
கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இத்திட்டத்தின்படி கணக்கிடப்பட்ட நிலுவைத்தொகையில் 25 சதவிகித தொகையை செலுத்தி 12-3-2024-ம் தேதிக்குள் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். எஞ்சிய தொகையினை 6 மாத காலத்திற்குள் அதிகபட்சமாக 6 தவணைகளில் செலுத்த வேண்டும்" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் சிறப்பு முகாம்: கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், "2024-2025-ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் (பயண அட்டை) புதுப்பித்தல் மற்றும் புதியது வழங்கும் முகாம் நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் வருகிற 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையிலும் மற்றும் 9-ந் தேதியன்று என 5 நாட்கள் நடக்கிறது.
அதாவது 4-ந் தேதியன்று அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கும், 5-ந் தேதி கல்குளம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கும், 6-ந் தேதி விளவங்கோடு தாலுகாவிற்குட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்கும் முகாம் நடைபெறும். இதேபோல 7-ந் தேதியன்று தோவாளை தாலுகாவிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், 9-ந் தேதி கிள்ளியூர் மற்றும் திருவட்டார் தாலுகாக்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் முகாம்கள் நடத்தப்படுகிறது.
பஸ் பாஸ் அட்டை பெற்று பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டையுடன் தற்போது கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் கல்வி பயில்வதற்கான நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அசல் சான்று, பணிக்கு செல்வோர் பணிபுரியும் இடத்திலிருந்து பணிபுரிவதற்கான அசல் சான்று, சுயதொழில் புரிபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சுயதொழில் புரிவதற்கான அசல் சான்றுடன் முகாமிற்கு வரவேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், யு.டி.ஐ.டி. அட்டை நகல் மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications