கன்னியாகுமரியை கலக்கிய தாரகை.. அருமனையில் பார்? "சவுண்டு" விட்ட எம்எல்ஏ.. வியந்துருச்சு விளவங்கோடு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருமனை அருகே, திடீரென கிராம மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.. இதைக்கேள்விப்பட்டு காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன், முக்கிய எச்சரிக்கை ஒன்றையும் பிறப்பித்தது, குமரியையே கதிகலங்க செய்துவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூடு- மாலைக்கோடு சாலையில் உள்ளது சிறக்கரை என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் மது பார் அமைய உள்ளதாக திடீரென தகவல் பரவியது. இதைக்கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை, சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் கேட்டை திறந்து உள்பகுதியில் பார் அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் கிராம மக்களுக்கு தெரிந்து உடனடியாக திரண்டு வந்துவிட்டார்கள்.. பெண்கள் சிறுவர்கள் உட்பட பலர் அங்கு திரண்டு வந்தனர்.. அந்த கட்டிடத்தின் எதிரிலேயே பந்தல் அமைத்து உட்கார்ந்துவிட்டனர்.. கட்டிடத்திற்குள் பார் கொண்டுவந்தால், தங்கள் எதிர்ப்பு மேலும் தீவிரம் அடையும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளவங்கோடு: அதற்குள் இடைக்கோடு வருவாய் ஆய்வாளர் வீனா மற்றும் போலீசாரும், சம்பவ இடத்துக்கு வந்தனர்.. கட்டிடத்தில் வேலை செய்தவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள்.. என்ன பணி நடந்து வருகிறது? என்றும் கேட்டார்கள். அந்த பணியாளர்கள், பார் எதுவும் அமைக்கவில்லை, வெறும் ஓட்டலுக்கான பணிகள் மட்டுமே நடந்து வருவதாக சொன்னார்கள்.
ஆனால், கட்டிட பணியாளர்கள் சொல்வதை, கிராம மக்கள் ஏற்கவில்லை.. கட்டிடத்துக்குள் பார் அமைக்கும் பணி நடந்து வருவதாக கூறினார்கள்.. அத்துடன், கட்டிடத்தின் மேல்பகுதியில் பார் தொடர்பான பலகை எதற்காக வைத்திருக்கிறீர்கள்? உடனடியாக அதை அகற்றுங்கள் என்று ஆக்ரோஷமாக கோஷமிட்டார்கள்.
எம்எல்ஏ தாரகை: இதனிடையே, தகவலறிந்து காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், இடைக்கோடு பேரூராட்சி தலைவி உமாதேவி ஆகியோரும் கட்டிட பணி நடக்கும் இடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போதுதான், உண்மையிலேயே அந்த கட்டிடத்தில், தனியார் பார் அமைப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதை, எம்எல்ஏ, தாரகை உறுதி செய்தார்.
பிறகு உடனடியாக, கட்டிடத்தின் மேற்பரப்பில் பொருத்தப்பட்டிருந்த தகர சீட்டுகளை அகற்றுமாறு உரிமையாளரிடம் கூறினார். அதற்கு உரிமையாளர்கள், அந்த தகர சீட்டுகளை அகற்றுவதற்கான பணியாளர்கள் யாருமில்லை என்றார்கள்..
ஆவேசம்: இதைக்கேட்ட கிராம மக்கள், இதற்கு எதற்கு பணியாளர்கள், நாங்களே அகற்றுகிறோம் என்று சொல்லி, கட்டிடத்தின் மீது பொருத்தப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளை அகற்றி எறிந்தனர்.. பிறகு எம்எல்ஏ தாரகை, கட்டிட உரிமையாளர்களிடம், "இனியும் இங்கு பார் அமைத்தால், நானே தீ வைத்து கொளுத்திவிட்டு, இங்கு உட்கார்ந்து போராடுவேன்" என்று ஆவேசமாக சொன்னார்.. இதற்கு பிறகு கிராம மக்களும் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
முன்னதாக காங்கிரஸிலிருந்து விலகிய எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் சேர்ந்த நிலையில் விளவங்கோடு காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து எம்பி தேர்தலோடு விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட தாரகை கத்பெர்ட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications