கன்னியாகுமரி.. அமைச்சருக்காக சாலையில் அவசர பேட்ச் ஒர்க்.. தடுத்து நிறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏ ஆவேசம்
கன்னியாகுமரி: அமைச்சர் வந்து பார்த்ததுக்கு அப்புறம் சாலை அமைத்தால் போதும். இப்போது சாலை அமைக்கும் பணியை நிறுத்துங்கள் என்று கூறி காங்கிரஸ் எம்எல்ஏ சாலை அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் வருகைக்காக சீரமைக்கப்பட்ட நெடுஞ்சாலை பேட்ச் ஒர்க்கை விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில பேராசிரியாக இருந்தவர் தாரகை கத்பர்ட். பிஹெச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற்ற இவர், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஒரு காலத்தில் இருந்தவர். அண்மையில் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். இவர் தனது விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்ட சாலையில் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது நெடுஞ்சாலையில் பேட்ச் ஒர்க் செய்யும் பணிக்காக பணியாளர்கள் வந்திருந்தனர். நாளை(இன்று) அமைச்சர் வருவதையொட்டி சாலையில் பேட்ச் ஒர்க் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த பேட்ச் ஒர்க் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்எல்ஏ தாரகை, அமைச்சர் வந்து பார்த்ததுக்கு அப்புறம் சாலை அமைத்தால் போதும். இப்போது சாலை அமைக்கும் பணியை நிறுத்துங்கள் என்று கூறி, பணிகளை நிறுத்தினார். அண்மையில் சாலை சரியில்லாத காரணத்தால் விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் இறந்த நிலையில், சாலையை முழுமையாக சீரமைக்காமல் பேட்ச் ஒர்க் மட்டும் செய்வது தவறு என்று எம்எல்ஏ தாரகை எதிர்ப்பு தெரிவித்தார்.
என்ன நடந்தது: கன்னியாகுமரி மாவட்டத்தில் குண்டும் குழியுமாக இருந்த குளித்துறை நெடுஞ்சாலையை, அமைச்சர் எவ வேலுவின் வருகையை முன்னிட்டு அவசர அவசமாக பேட்ச் ஒர்க் செய்யும் பணி நேற்று நடந்தது. முன்னதாக இந்த சாலையின் நிலை குறித்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் அமைச்சர் எ.வ.வேலுவின் கவனத்திற்கு கொண்டு செல்ல எம்எல்ஏ தாரகை திட்டமிட்டிருந்தாராம். ஆனால் ஒப்பந்ததாரர் சாலையை சீரமைக்கும் பணியில் அவசர அவசரமாக ஈடுபட்டாராம். இதனால் தகவல் அறிந்து வந்த விளவங்ககோடு எம்எல்ஏ தாரகை, உடனடியாக சாலை பணிகளை தடுத்து நிறுத்தினார்.
இவ்வளவு நாள் பணிகளை செய்யாமல், இப்போது பேட்ச் ஒர்க் மட்டும் செய்வது சரியா என்று கேள்வி எழுப்பியதுடன், அமைச்சர் எவ வேலு அவர்கள் வந்து பார்த்த பின்னர், சாலை அமைத்துக் கொள்ளலாம் என்று கூறி பணிகளை தடுத்து நிறுத்தினார். இதனால் சாலையில் பாதி வேலைகளை முடிந்த நிலையில் பணியாளர்கள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் தாரகை எம்எல்ஏ சாலை பணிகளை தடுத்து நிறுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்டின் இந்த செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications