மும்பைக்கு பறந்த மனைவி.. கன்னியாகுமரியில் ஆல்வின் செயலால் ஆடிப்போன உறவுகள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் அருகே நெசவாளர் காலனியை சேர்ந்த ஆல்வின் என்பவர் மும்பையை சேர்ந்த ஜெனிபர் என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.. ஜெனிபர், ஆல்வின் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஜெனிபர் மும்பையில் தனது பெற்றோருடன் வசிக்கிறார். மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்ற ஏக்கத்தில் ஆல்வின் எடுத்த தவறான முடிவு குடும்பத்தினரை அதிர வைத்துள்ளது.
கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படுவது இயல்பான ஒன்று. தம்பதியர் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்கு ஈகோ தான் முக்கிய காரணமாக இருக்கிறது. பல குடும்பங்களில் விட்டுக் கொடுத்து செல்லும் தன்மை இல்லாததால் வாழ்க்கையில் புயல் வீசுகிறது. சண்டை ஏற்படும் போது, தவறுகளை உணர்ந்து மனம் விட்டு பேசினால் பிரச்சனை முடிந்துவிடும்.

ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை.. கணவன் அல்லது மனைவி இருவரில் யாராவது ஒருவர், தன்னுடைய பேச்சை மட்டுமே கேட்டு வாழ்க்கை துணை செயல்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். மறுபக்கம், மாமியார் மருமகள் சண்டை, மனைவிக்கு ஆதரவாக கணவன் இல்லாதது, மனைவி, அவருடைய அம்மா பேச்சை கேட்டு செயல்படுவது போன்ற சிக்கல்கள் தான் பல பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது. வாழ்க்கையில் புரிதல்கள் இல்லாமல் சின்ன சின்ன பிரச்சனைக்கு எல்லாம் தம்பதிகள் தவறான முடிவெடுக்கிறார்கள். அந்த வகையில் மனைவி குடும்ப பிரச்சனையில பிரிந்து சென்றதால் கன்னியாகுமரி அருகே கணவன் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ஏசுஅடிமை. இவர் விவசாயி ஆவார். இவருக்கு 2 மகன்கள். இதில் இளைய மகன் ஆல்வினுக்கு 28 வயது ஆகிறது. இவர் டிரைவர் வேலை செய்து வந்தார். ஆல்வினுக்கும் மும்பையை சேர்ந்த அற்புத மணி மகள் ஜெனிபர் (28) என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்தனர். கடந்த 3 வருடங்கள் முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. எனினும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். ஆல்வின் மனைவி ஜெனிபர் மும்பையில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனிடையே மனைவி பிரிந்து சென்ற நாள் முதலே ஆல்வின் மன வேதனையில் இருந்து வந்தாராம்.
ஒரு கட்டத்தில் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என தவறான முடிவெடுத்த ஆல்வின், சில நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மணிக்கு மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் ஆல்வின் உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கணவன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications