கன்னியாகுமரியில் திமுக பேரூராட்சி துணை தலைவி.. நகைக்கடையில் கும்பலாக திருடி.. ஒரே அசிங்கம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த ஷார்லின் சேம் என்பவர் குளச்சல் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் கவரிங் நகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கவரிங் நகை கடையில் கும்பலாக புகுந்து நூதன முறையில் திருடிய தி.மு.க.வை சேர்ந்த பேரூராட்சி துணைத்தலைவியை போலீசார் கைது செய்தனர். அவர் எப்படி சிக்கினார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த ஷார்லின் சேம் என்பவர் குளச்சல் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் கவரிங் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ஒரு கிராம் தங்கம் முலாம் பூசப்பட்ட நகைகள், ஐம்பொன் நகைகள் என விற்பனை செய்து வந்திருக்கிறார். தினமும் கடைக்கு பலர் வந்து போவார்கள். அவரது கடையில் பெண் ஊழியர் ஒருவர் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இந்த கடையில் பெண் ஊழியர் மட்டும் தனியாக இருந்தார். அப்போது 4 பெண்கள், ஒரு ஆண் என 5 பேர் கவரிங் நகை வாங்க வந்தனர். அவர்களிடம் பெண் ஊழியர் கடையில் இருந்த நகைகளை எடுத்து காட்டிக்கொண்டிருந்திருக்கிறார்.
அந்த சமயத்தில் கும்பல், பெண் ஊழியரின் கவனத்தை பேச்சுக் கொடுத்த படி திசை திருப்பிக் கொண்டிருந்தார்களாம். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் தங்க முலாம் பூசிய 7 காப்பு, 14 தாலி சங்கிலி, 3 ஐம்பொன் சங்கிலி, 3 பிரேஸ்லெட் என ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகளை நைசாக திருடி தங்களிடம் இருந்த பையில் மறைத்து வைத்து கொண்டனர். பின்னர் நகைகள் எதுவும் வேண்டாம் எனக்கூறி கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்களாம்.
அவர்கள் சென்ற பிறகு பெண் ஊழியர் நகைகளை சரிபார்த்த போது சில நகைகள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து அவர் உடனடியாக கடை உரிமையாளர் ஷார்லின் சேமிடம் கூறினார். அவர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், நைசாக நகைகளை திருடும் கும்பலின் உருவம் பதிவாகி இருந்ததை கண்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், தி.மு.க.வை சேர்ந்த புத்தளம் பேரூராட்சி துணைத்தலைவி பால் தங்கம் (வயது 50), தனது மகள், கார் டிரைவர் உள்பட 5 பேருடன் கடைக்கு வந்து நகைகளை கைவரிசை காட்டியதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பேரூராட்சி துணைத்தலைவி பால்தங்கம், அவரது மகள் சபரிஷா (30), கார் டிரைவர் அனிஷ் (29) மற்றும் உறவினர் தங்க புஷ்பம் (38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டு நகைகளை போலீசார் மீட்டார்கள். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள விஜயலட்சுமி (45) என்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பேரூராட்சி துணைத்தலைவி மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட 3 வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே தி.மு.க.வை சேர்ந்த பேரூராட்சி துணைத்தலைவி கும்பலாக சென்று கடையில் நகை திருட்டில் ஈடுபடும் கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications