தேனியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரன்.. கன்னியாகுமரியில் கோடிகளில் மோசடி.. பாய்ந்த வழக்கு
கன்னியாகுமரி: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஏசுராஜசேகரன் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் கன்னியாகுமரியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 27 பேரிடம் பணம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரன் மற்றும் உடந்தையாக இருந்த பெண் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்த லலிதா என்பவர் கடந்த 21-ந் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பண்ணைபுரம் சின்னமாங்குளத்தை சேர்ந்த ஏசுராஜசேகரன் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் பணியாற்றினாா்.

அப்போது எனது வீட்டுக்கு முன் உள்ள வாடகை வீட்டில் குடியேறினார். அவருடன் கனகதுர்கா என்ற முனியம்மாள் என்ற பெண்ணும் அந்த வீட்டில் வசித்தார். அந்த பெண்ணை தன் மனைவி என்று அவர் அறிமுகப்படுத்தினார். மேலும் முனியம்மாள் பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருவதாகவும், அதன் மூலம் என் மகனுக்கு அரசு பள்ளியில் இளநிலை உதவியாளர் பணி வாங்கித் தருவதாகவும் ஆசைவார்த்தைகளை எங்களிடம் கூறினார்.
இதனை நம்பி நானும் அரசு பணிக்காக ரூ.4.50 லட்சத்தை அவர் கூறியபடி கொடுத்துவிட்டேன். இதே போல மேலும் 50 பேருக்கு இளநிலை உதவியாளர் வேலை இருப்பதாகவும், 10 பேருக்கு ஆசிரியர் வேலையும் இருப்பதாகவும் என்னிடம் அவர் கூறினார். இதை நம்பி எனது உறவினர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் உள்பட பலரும் வேலைக்கு ஆசைப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரனிடம் பணம் கொடுத்தனர்.
அந்த வகையில் 27 பேர் தங்களது வீடு மற்றும் நகை ஆகியவற்றை அடமானம் வைத்து மொத்தம் ரூ.1.47 கோடி வரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரனிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர் கூறியது போல அரசு வேலை எங்கள் யாருக்கும் வாங்கி தரவில்லை. பணத்தையும் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டார். எனவே ஏசுராஜசேகரன் மற்றும் முனியம்மாள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு நாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பி பெற்றுத்தர வேண்டும்" இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரன் மற்றும் அவருடைய மனைவி என்று கூறிய முனியம்மாள் ஆகிய 2 பேர் மீது விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரன் மற்றும் அவருடைய மனைவி என்று கூறிய முனியம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதில் முனியம்மாள் மீது தேனி மாவட்டத்தில் ஏற்கனவே மோசடி வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே வழக்குப்பதிவு செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இப்போது பணியாற்றி வந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டி.ஐ.ஜி. மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications