கோடி கோடியாய் பணத்தில் மூழ்கிய கன்னியாகுமரி தோழி.. 10 சிம் கார்டுகளில் கோடீஸ்வரர்களை சாய்த்த பெண்
கன்னியாகுமரி: மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன.. 2 குழந்தைகளின் தாய் என்றும் பாராமல், விதவை என்றும் பாராமல், உயிரைக் கொடுத்த ராணுவ வீரரின் இழப்பீட்டு தொகையையே குறிவைத்து ஒரு பெண் ஏமாற்றியிருப்பது, பேரதிர்ச்சியை கன்னியாகுமரி மக்களுக்கு தந்து கொண்டிருக்கிறது..என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மேல்பாலை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார்..
அவரது மறைவுக்கு பிறகு, ராணுவம் மற்றும் ரயில்வே துறை சார்பில் அவரது மனைவி தேவிக்கு தலா 50 லட்சம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி விதவை
கணவனை இழந்து 2 மகன்களுடன் வசித்து வந்த தேவியிடம் இருந்த இந்த பெரும் பணத்தை அபகரிக்க, அதே பகுதியைச் சேர்ந்த கல்பனா என்ற பெண் திட்டமிட்டார். கல்பனாவின் கணவரும் ராணுவத்தில் பணியாற்றுவதால், இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு உருவானது... அதேபோல தேவியின் மகன்கள் படிக்கும் பள்ளியின் வழியாக இந்த நட்பு மேலும் வலுவடைந்தது.
தேவியிடம் இருக்கும் பணத்தை குறிவைத்த கல்பனா, தங்களிடம் ஒரு குழு இருப்பதாகவும் அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 8 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இரட்டிப்பு லாபம் - இழப்பீட்டுத் தொகை
உடனே இதனை நம்பிய தேவி முதற்கட்டமாக பணத்தை கொடுத்துள்ளார். அதன் பிறகு, குழுவில் மற்றவர்கள் பணம் கட்டவில்லை என்றும், அந்தப் பணத்தையும் தேவியே கட்டினால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் சொல்லி, படிப்படியாக 30 லட்சம் ரூபாய் வரை கல்பனா வாங்கியுள்ளார்.
ஆனால், சொன்னபடி எந்தப் பணமும் தேவிக்கு திரும்பி வரவில்லை. தேவியின் அப்பாவித்தனத்தை பயன்படுத்திக் கொண்ட கல்பனா, தனது தோழியும் தனியார் கல்லூரி ஊழியருமான ஒரு பெண்ணுடன் இணைந்து அடுத்தகட்ட மோசடியை தொடங்கினார்.
பேங்க் மேனேஜர் - சலுகைகள்
அந்த கல்லூரி பெண் ஊழியர் தன்னை ஒரு வங்கி மேனேஜர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தேவியிடம் பேசியுள்ளார். தேவி ஒரு விதவை என்பதால் அரசு மற்றும் வங்கிகள் மூலம் பல்வேறு சலுகைகள் வரவிருப்பதாகவும், அதனை பெறுவதற்கு வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்றும் கூறி சுமார் 70 லட்சம் ரூபாயை ஏமாற்றிப் பறித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தேவியிடம் இருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் பல்வேறு காரணங்களை கூறி அந்த இரண்டு பெண்களும் வாங்கிக்கொண்டனர். ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை இழந்த தேவி, ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து தனது பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார்.
ரூ.30 லட்சம் நகைகள்
பணத்தை திரும்பக் கேட்ட தேவியை மிரட்டும் நோக்கில் அந்தப் பெண்கள் வெவ்வேறு எண்களில் இருந்து பேசி உள்ளனர். ஒருகட்டத்தில் தேவியைக் கொலை செய்யவும் அவர்கள் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் நடுநடுங்கிப்போன தேவி, உடனே போலீசுக்கு ஓடிச்சென்று புகார் அளித்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மோசடியில் ஈடுபட்ட கல்லூரி பெண் ஊழியர் சுமார் 10க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
அவர் தேவியை மட்டுமல்லாமல், வசதி படைத்த பல ஆண்களை தன்னுடைய ஆசை வார்த்தைகளால் மயக்கி பணம் பறித்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் இப்போது கல்பனா மற்றும் கல்லூரி பெண் ஊழியர் இருவருமே தலைமறைவாக உள்ளனர்.. போலீசார் அவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications