கன்னியாகுமரி தாமிரபரணியில் 2 சிறுவர்களை காப்பாற்றிய பீட்டர்.. அடுத்து கனவிலும் நினைக்காத சம்பவம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தபால் நிலையம் பகுதியைச் சேர்ந்த பீட்டர், தாமிரபரணியில் குளிக்க செல்வது வழக்கம்.. அந்த வகையில் குளிக்க சென்ற போது, ஆற்றில் தண்ணீர் அதிகமாக போய்க்கொண்டிருந்தது. இரண்டு சிறுவர்கள், நீரில் வழுக்கி தவறி விழுந்தனர். பீட்டர், சற்றும் தாமதிக்காமல் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை நீச்சலடித்து காப்பாற்றி கரை சேர்த்தார். ஆனால் அவர் கரை சேரவில்லை. அவருடைய மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.திருமண ஏற்பாடு நடந்து வந்த வேளையில் இப்படியான சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தபால் நிலையம் பகுதியைச் சேர்ந்த பீட்டருக்கு 58 வயது ஆகிறது. இவருக்கு ஜெசி என்ற மனைவியும், ஆன்சி தீனா (27) என்ற மகளும், ஆலன் பீட்டர் (25) என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மகன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பீட்டர் குழித்துறையில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் காலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்வது வழக்கம். அதன்படி நேற்று ஆற்றில் தடுப்பணை பகுதியில் குளிக்க சென்றார். அங்கு குளிப்பதற்கு முன்பு கரையில் துணி துவைத்து கொண்டிருந்தார்.

அப்போது மார்த்தாண்டம் நல்லூரை சேர்ந்த 17 வயதாகும் 12-ம் வகுப்பு மாணவன் மனோ , மதிலகத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் அகிலேஷ் (12) ஆகியோர் குழித்துறை வி.எல்.சி. மைதானத்தில் கிரிக்கெட் விளையாட செல்வதற்காக ஆற்றின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்கு தடுப்பணை வழியாக நடந்து சென்றுள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால் தடுப்பணையை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றிருக்கிறது.
தடுப்பணையின் நடுப்பகுதியில் வந்த போது அங்கு பாசி படர்ந்து இருந்ததால் 2 சிறுவர்களும் வழுக்கி விழுந்தனர். இதனால் இருவரையும் தண்ணீர் இழுத்து சென்றது. உடனே 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என்று சிறுவர்கள் கூச்சலிட்டனர். இதனை ஆற்றின் கரையில் துணி துவைத்து கொண்டிருந்த பீட்டர் கவனித்தார். உடனே அவர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சிறுவர்களை காப்பாற்ற ஆற்றுக்குள் குதித்தார். அவர் தண்ணீரில் நீச்சலடித்து சிறுவர்கள் அருகே சென்று இருவரையும் மீட்டு கரைசேர்த்தார். அவர் ஆற்றின் கரையை தொடும் தூரத்தில் இருந்தபோது, திடீரென ஆற்று வெள்ளம் அதிகமானதால், வெள்ளத்தில் பீட்டர் சிக்கி கொண்டார். எதிர் நீச்சலடிக்க முயன்ற அவரால் முடியவில்லை... அவரை வெள்ளம் இழுத்துச் சென்றது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கரையில் நின்றவர்கள் இதுகுறித்து உடனடியாக குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். குழித்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து படகு மூலம் பீட்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இரவு வரை தேடும் பணி நடந்தும் அவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதனால் பீட்டர் உயிரிழந்திருக்க நேரிடும் என அச்சம் எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். உயிரை பணயம் வைத்து 2 சிறுவர்களை காப்பாற்றியவரை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications