அண்ணாமலையிடம் அரசியல் பக்குவம் இல்லை.. அவர் பேச்சை பொருட்படுத்த வேண்டியதில்லை -அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் பக்குவம் கிடையாது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார்.

அண்ணாமலை அரசியல் கட்சியின் தலைவரை போல் செயல்படாமல் இப்போதும் தன்னை ஒரு போலீஸ் அதிகாரியாகவே நினைத்து செயல்படுகிறார் என்றும் அண்ணாமலை பேசுவதையெல்லாம் பொருட்படுத்தவே தேவையில்லை எனவும் கூறினார்.
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 2 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு என்றும் மாணவர்களுக்கு தவறான நம்பிக்கை அளித்தது தமிழக அரசு தான் எனவும் அண்ணாமலை விமர்சித்திருந்தார். மேலும், திமுக அரசு தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறும் எனவும் அண்ணாமலை கூறியிருந்தார்.
திமுகவினர் செய்யும் மலிவான அரசியல் காரணமாகவே தமிழகத்தில் மாணவர்கள் உயிரிழப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். தமிழகத்தை பொறுத்தவரை ஏழை எளிய மாணவர்கள் பணம் கொடுக்காமல், அரசியல்வாதிகளை நாடாமல் மதிப்பெண் தகுதியும் திறமையையும் மட்டும் அடிப்படையாக கொண்டு மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், அண்ணாமலையின் பேச்சையும், செயல்களையும் பார்க்கும் போது அவருக்கு அரசியல் தலைவருக்கான முதிர்ச்சி இல்லை என்பது தெரிய வருவதாக சாடியிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய போது, அதில் கலந்துகொள்ளாமல் பாஜக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை பாஜக-காங்கிரஸ்-திமுக ஆகிய மூன்று கட்சிகளும் ஓரளவு கணிசமான வாக்கு வங்கிகளை கொண்டுள்ளன. மற்ற மாவட்டங்களை காட்டிலும் கன்னியாகுமரியில் திமுக-பாஜக இடையே தான் அரசியல் மல்யுத்தம் நடைபெறுவது வழக்கம்.
பாஜக வெற்றி பெற்ற 4 சட்டமன்ற தொகுதிகளில் நாகர்கோவில் தொகுதயும் ஒன்று. மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் சொந்த மாவட்டமும் குமரி தான். இதனால் அங்கு திமுக -பாஜக இடையே எப்போதுமே அனல் பறக்கும் அரசியல் கருத்துக்கள் பரிமாறப்படும்.












Click it and Unblock the Notifications