நடுவழியில் நாகர்கோவில் வந்தே பாரத்.. மதுவில் மயங்கிய நாங்குநேரி கேட் கீப்பர்கள்.. கடைசியில் ட்விஸ்ட்
கன்னியாகுமரி: நாகர்கோவில்-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு நாகர்கோவிலில் புறப்பட தயாராக இருந்தது. அந்த சமயத்தில் ரயில் நிலையத்தில் இருந்து மேலாளர் அனைத்து ரயில்வே கேட் கீப்பர்களையும் போன் மூலம் தொடர்பு கொண்டு தயாராக இருக்கும்படி உஷார்ப்படுத்தினார். நாங்குநேரி ரயில்வே கேட்டிலுள்ள கேட் கீப்பர் மட்டும் போன் அழைப்பை எடுக்கவில்லை. மதுபோதையில் மயங்கிய கேட் கீப்பர்களால், நடுவழியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தில் தினமும் 100க்கணக்கான ரயில்கள் வந்து செல்லும் இரு வழியிலும் ரயில்கள் போகும் எண்ணிக்கை அதிகம். இதில் மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், பொத்தேரி ஆகிய 3 ரயில்வே கேட்கள் மிக ஆபத்தானவை. அங்கு ஒரு பக்கம் எக்ஸ்பிரஸ் வரும், மறுபக்கம் மக்களும் ரயில்வே கேட்டை கடக்க வேண்டிய நெருக்கடியான நிலை எப்போதுமே இருக்கும்.

சாதூர்யம்
அப்படியான சூழலில் சிறு பிசுரு தட்டினாலும் பெரிய சிக்கல் ஏற்படும். அப்படி நெருக்கடி மிகுந்த ரயில்வே கேட்டுகளை கேட் கீப்பர்கள் இன்று வரை சாதூர்யமாக கையாண்டு, ரயில் போக்குவரத்து மற்றும் பயணிகள் கடப்பதை சமாளித்து வருகிறார்கள். ஆனால் நாகர்கோவில் அருகே மதுபோதையில் தூங்கி வழிந்து வந்தே பாரத் ரயிலையே நடுவழியில் நிறுத்த வைத்துள்ளனர்.. இது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடந்துள்ளது..
போனில் தொடர்பு கொண்ட மேலாளர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கடந்த மார்ச் 21ம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 3 மணிக்கு நாகர்கோவிலில் புறப்பட தயாராக இருந்தது. பொதுவாக ரயில் கிளம்பும் போது, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து மேலாளர் அனைத்து ரயில்வே கேட் கீப்பர்களையும் போன் மூலம் தொடர்பு கொண்டு தயாராக இருக்கும்படி உஷார்ப்படுத்துவார்.
போனை எடுக்காத நாங்குநேரி ரயில்வே கீட் கீப்பர்கள்
அப்படி நாகர்கோவில் ரயில் நிலைய மேலாளர் அழைத்த போது, நெல்லை மாவட்டம் நாங்குநேரி ரயில்வே கேட்டிலுள்ள கேட் கீப்பர் மட்டும் போன் அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து மற்றொரு ஊழியரை தொடர்பு கொண்டு நாங்குநேரி ரயில்வே கேட்டை மூடும்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த ஊழியர் நாங்குநேரி ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள கேட் கீப்பரும், மற்றொரு கேட் கீப்பரும் மது போதையில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நடுவழியில் ரயில் நிறுத்தம்
இதற்கிடையே வள்ளியூர் ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் வந்தபோது, நடுவழியில் நிறுத்தப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாற்று ஊழியர் மூலம் நாங்குநேரி ரயில்வே கேட் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிக்னல் கிடைத்து, வந்தே பாரத் ரயில் மீண்டும் புறப்பட்டது. இந்த சம்பவத்தால் ரயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
மதுபோதையில் இருந்தது உறுதி
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், மதுபோதையில் மயங்கிக் கிடந்த கொம்பையா, சிராவன் ஆகிய 2 ஊழியர்களையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். இதில் மதுபோதையில் இருவரும் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
பணியிடை நீக்கம்
இதைத் தொடர்ந்து பணி நேரத்தில் மது போதையில் இருந்ததால் 2 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இருவரையும் நாகர்கோவில் ரயில்வே பொறியாளர் பிரிவு அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். ரயில்வே வாரியத்தின் விதிகளின்படி, பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஊழியர்கள் மது அருந்திவிட்டுப் பணியில் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது விதி.
வேலை பறிபோய்விடும்
குறிப்பாக வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்கள் இயக்கப்படும் பாதையில் இத்தகைய அலட்சியம் மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே மதுபோதையில் இருந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. விசாரணை அதிகாரி விசாரணை நடத்துவார். இறுதி அறிக்கைக்கு பிறகு கடுமையான தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications