ஹனிமூன் சென்ற இடத்தில் நண்டு சாப்பிட்ட புதுமணப்பெண் .. மூச்சுத்திணறி பலி.. குமரியில் சோகம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நண்டு சாப்பிட்ட புதுமணப் பெண் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். பொறியாளரான இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவரது மனைவி கிருபா (25).

இவர்கள் இருவரும் கன்னியாகுமரியில் தமிழக கேரள எல்லையில் நெட்டா பகுதியில் உள்ள சிற்றார் அணையின் கரையில் அமைந்துள்ள விடுதியில் நேற்று முன் தினம் ஹனிமூனுக்காக வந்து தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் விடுதியில் வழங்கப்பட்ட நண்டு உணவை தினேஷ் குமாரும் கிருபாவும் சாப்பிட்டுள்ளனர், அப்போது புதுப்பெண் கிருபாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தன்னிடம் வைத்திருந்த மருந்துகளை கிருபா சாப்பிட்டுள்ளார்.
எனினும் கிருபாவுக்கு மூச்சுத்திணறல் சரியாகாமல் நிலைமை மோசமடைந்துள்ளது. இதையடுத்து குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கிருபா அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதுகுறித்து கடையாலுமூடு காவல் துறையினர் உயிரிழந்த கிருபாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுதியில் வழங்கப்பட்ட உணவால் உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தப்படுகிறது.
கிருபாவுக்கு திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆகிய நிலையில் புதுமணப்பெண் உயிரிழந்தது குறித்து பத்பநாபபுரம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். ஹனிமூன் வந்த இடத்தில் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications