தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்.. 40 பயணிகள் படுகாயம்.. நாகர்கோவில் - நெல்லை சாலையில் கோர விபத்து
குமரி: நாகர்கோவில் - நெல்லை சாலையில் குமரி தோவாளை அருகே ஆம்னி பஸ் ஒன்று சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ்சானது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் இடிபாடுகளில் சிக்கி 40 பயணிகள் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஆரல்வாய்மொழி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

40 பயணிகள் காயம்
நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் நெல்லை - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் தோவாளை அருகே விசுவாசபுரம் அருகே வந்துகொண்டிருந்தது.
அப்போது திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது மோதியது. மோதிய வேகத்தில் பஸ் தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் படுகாயமடைந்து மரண ஓலம் எழுப்பினர். 40 பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக விபத்து குறித்து போலீசாருக்கு தெரியப்படுத்தபப்ட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதற்கிடையே அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த ஆம்புலன்சில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சாலையில் கவிழ்ந்து கிடந்த ஆம்னி பேருந்தை அப்புறப்படுத்தும் பணிகளை முடுக்கி விட்டனர். இந்த விபத்தால் நெல்லை - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்சில் வெளிநாட்டை சேர்ந்த பயணிகளும் பயணித்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்கான காரணம் என்ன?
விபத்துக்கு காரணம் என்ன என போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த சாலையின் நடுவில் இருக்கும் சென்டர் மீடியனால் தான் அடிக்கடி இங்கு விபத்து நடப்பதாகவும், அந்த சென்டர்மீடியனை அகற்றக்கோரி பல முறை அப்பகுதி மக்கள் முறையிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications