கன்னியாகுமரியில் மோடி.. நாளை முதல் 3 நாளைக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் பிரதமா் மோடி தமது 3 நாள் தியானத்தை நாளை தொடங்க உள்ளார். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நாளைய தினம், கன்னியாகுமரிக்கு சென்று அங்கு 2 நாட்கள் தங்கியிருந்து கடலில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தியானம் செய்வதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கன்னியாகுமரி: இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகள் சந்திக்கும் இடம் கன்னியாகுமரியாகும். இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலின் சந்திப்பு புள்ளியாகவும் இந்த கன்னியாகுமரி உள்ளது.
சுவாமி விவேகானந்தர் பாரத மாதாவை தரிசனம் செய்த இடம் கன்னியாகுமரியாகும்.. சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த அதே இடத்தில் பிரதமர் மோடி, 2 நாட்கள் தங்கியிருந்து கடலில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தியானம் செய்ய உள்ளார்.. தேர்தல் பிரச்சாரங்களின் முடிவில் இந்த ஆன்மீக பயணத்தை பிரதமர் மேற்கொள்வதாக தெரிகிறது.
இதுதான் பிளான்: இதையொட்டி, மே 30-ம் தேதி கன்னியாகுமரி வந்து ஜூன் 1-ம் தேதி வரை தங்குகிறார். டெல்லியிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நாளை பிற்பகல் 3.55 மணிக்கு விமானத்தில் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு வருகிறாா்.
பின்னர், அங்குள்ள அரசு விருந்தினா் மாளிகையில் தரையிறங்கும் அவா், கடல் நடுவேயுள்ள விவேகானந்தா் பாறைக்கு தனிப் படகில் செல்கிறாா். பிறகு விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் சனிக்கிழமை அதாவது ஜூன் 1 பிற்பகல் வரை தொடா்ந்து தியானத்தில் ஈடுபடவுள்ளாா்.
அதிரடி தடை: பிரதமா் மோடி தியானம் செய்யவுள்ளதால், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களும் சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமரின் பாதுகாப்புப் படை அதிகாரிகளும், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாா், மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையிலான போலீஸாரும் விவேகானந்தா் மண்டபம், பூம்புகாா் படகுத்துறை, அரசு விருந்தினா் மாளிகை வளாகம் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வில் ஈடுபட்டுள்ளார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: முன்னதாக, காவல் துறை, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள் விவேகானந்த கேந்திரத்தில் ஆலோசனைகளை மேற்கொண்டனர்.. ஹெலிகாப்டா் ஒத்திகையும் நடத்தப்பட்டது. இதற்காக, திருவனந்தபுரத்திலிருந்து வந்த ஹெலிகாப்டா்கள், கன்னியாகுமரி அரசு அரசு விருந்தினா் மாளிகையில் தரையிறங்கிவிட்டு, மீண்டும் திருவனந்தபுரம் சென்றன.
பிரதமா் வருகையையொட்டி, கன்னியாகுமரி முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளிலும், கடல் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
