வேட்டி, அங்கவஸ்திரம் அணிந்து.. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தியுடன் மோடி சாமி தரிசனம்!
கன்னியாகுமரி: விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்ய 3 நாள் பயணமாக இன்று கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி மேலாடை இன்றி வேஷ்டி மற்றும் அங்கவஸ்திரம் மட்டுமே அணிந்து பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில் அதன் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி ஒவ்வொரு லோக்சபா தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பிறகு தியானம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த 2014ல் பிரதாப்கர், அதன்பிறகு உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் குகையில் தியானம் செய்தார்.

அதன்படி 7 வது மற்றும் கடைசி கட்ட லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி தியானத்துக்காக கன்னியாகுமரி வந்துள்ளார். இன்று முதல் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த வருகைக்கு காங்கிரஸ், திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் மோடியின் பயணத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். ஆனால் பிரதமர் மோடி திட்டமிட்டப்படி 3 நாள் பயணமாக இன்று கன்னியாகுமரி வந்தார்.
இன்று பிற்பகல் 3.55 மணிக்கு விமானத்தில் திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்தார். அதன்பிறகு அங்கிருந்து அவர் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்கு முன்பு பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய புறப்பட்டார்.
பகவதி அம்மன் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி பாரம்பரிய முறையில் தரிசனம் செய்தார். அவர் மேலாடை அணியவில்லை. மேலாடைக்கு பதிலாக உடலில் அங்கவஸ்திரம் மற்றும் வேஷ்டி மட்டும் அணிந்திருந்தார். பிரதமர் மோடி மேலாடை இன்றி அங்கவஸ்திரம் மற்றும் வேஷ்டி மட்டும் அணிந்து தரிசனம் செய்ததன் பின்னணியில் ஆகம விதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது கன்னியாகுமரி இதற்கு முன்பு பழைய திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. அந்த சமயத்தில் பகவதியம்மன் கோவிலில் கேரளாவின் ஆகம விதிகள் படி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாகவே இந்த பகவதியம்மன் கோவிலில் ஆண்கள் சட்டை, பனியன் அணிந்து தரிசனம் செய்ய அனுமதியில்லை.
வேஷ்டி, பேண்ட் அணிந்து மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும் என்பது விதியாக உள்ளது. அதனை பின்பற்றி தான் பிரதமர் மோடி மேலாடை அணியாமல் வேஷ்டி அணிந்து உடலில் அங்கவஸ்திரத்தை போர்த்தி கொண்டு தரிசனம் செய்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு நிர்வாகம் சார்பில் அங்கவஸ்திரம் மற்றும், பகவதியம்மன் போட்டோ வழங்கப்பட்டது. அதன்பிறகு பிரதமர் மோடி படகில் கன்னியாகுமரி கடலுக்குள் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தியானத்துக்காக சென்றார்.












Click it and Unblock the Notifications