கன்னியாகுமரியில் சிக்கிய கடல் தங்கம்.. பல கோடி மதிப்பு.. நாகர்கோவிலை தாண்டியபோது ட்விஸ்ட்
கன்னியாகுமரி: திமிங்கலத்தின் உமிழ் நீரான 'அம்பர் கிரீஸ்' உயர்ரக வாசனை திரவியங்கள் மற்றும் விலை உயர்ந்த மதுபானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரை போகிறது. இதன் காரணமாக இதனை கடல் தங்கம் என்று அழைக்கிறார்கள். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருப்பதிசாரம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 40 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள் இதுதொடர்பாக 3 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும்.
20 வயதை கடந்த திமிங்கலங்கள் தங்கள் உடலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இதுவே, அம்பர் கிரீஸ் என்று அழைக்கப்படுகிறது. கடலில் மிதக்கும் தன்மை கொண்ட அம்பர் கிரீஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளில் உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. விலை உயர்ந்த மதுபானங்களில் வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது. சில மருந்துகள் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கிலோ ஒரு கோடி
சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு கிலோ ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. . இதனால் இதனை 'கடல் தங்கம்' என அழைக்கிறார்கள். தற்போது இதன் தேவை சர்வதேச அளவில் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அம்பர் கிரீஸ் விற்க தடை உள்ளது. எனினும் தடையை மீறி கடத்துவது அடிக்கடி நடக்கிறது. திமிங்கலங்களை வேட்டையாடி அம்பர் கிரீஸை எடுக்க முடியாது என்கிற நிலையில், கடலில் மிதப்பதைத்தான் எடுத்து விற்கின்றனர்.
கிடைப்பது அரிதானது
மன்னார் வளைகுடா பகுதியில் அம்பர் கிரீஸ் கிடைப்பது அரிதானது. அதேநேரம் விசாகப்பட்டினம் உள்பட ஆந்திர பகுதியில் இவை கிடைப்பதாக கூறப்படுகிறது. அப்படி கிடைக்கும் அம்பர் கிரீஸை சிலர் இலங்கை வழியாக கடத்தி தூத்துக்குடிக்கு கொண்டு வந்து அதன்பின்னர் வளைகுடா நாடுகளுக்கு கடத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அப்படி கடத்தும் முயற்சியின்போது அவர்கள் சிக்கி கொள்கிறார்கள்.
ரகசிய தகவல்
அந்த வகையில் நேற்று தூத்துக்குடியில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு திமிங்கல உமிழ்நீர் கட்டி கடத்தப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் உதவி வன பாதுகாவலர் ஸ்ரீவல்சன் மேற்பார்வையில் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் நாகர்கோவில் திருப்பதிசாரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள்.
சொகுசு கார், டெம்பே வேன்
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு சொகுசு கார் ஒன்றும், அடுத்ததாக மீன் பெட்டி ஏற்றிய மினிடெம்போவும் வந்தன. அவற்றை அதிகாரிகள் சரியாக தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மினி டெம்போவில் இருந்த மீன்பெட்டியை சோதனை செய்த போது அதில் 40 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டி மறைத்து வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இவற்றை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.
40 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டி
இதையடுத்து 40 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டியை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் சரியான மதிப்பு விவரங்களை தெரியவில்லை.. இந்த விவகாரத்தில் டெம்போ டிரைவர் ஈத்தாமொழி ஆடராவிளையை சேர்ந்த 22 வயதாகும் தனுஷ் மற்றும் காரில் இருந்த தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த தினேஷ் (27), குலசேகரன்பட்டினம் ரதீஷ்குமார் (42) ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
மதிப்பிட முடியாது
இதுகுறித்து கன்னியாகுமரி வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, தூத்துக்குடியில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு திமிங்கல உமிழ்நீர் கட்டி கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து சோதனை செய்தோம். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீர் கட்டியின் மதிப்பை கூற முடியாது. காட்டில் உள்ள மரங்களுக்கு விலை மதிப்பிடலாம். ஆனால் உயிரினங்களை மதிப்பிட முடியாது என்றார்கள். 40 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications