குழந்தை கடத்தல் கும்பல்.. கன்னியாகுமரியையே அதிர வைத்த வதந்தி.. எஸ்பி சுந்தரவதனம் கடும் எச்சரிக்கை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் என வட மாநிலத்தவர் குறித்து வதந்தி பரவிய நிலையில், குழந்தை கடத்தல் குறித்து சமூகவலைத்தளத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் எச்சரித்துள்ளார
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லங்கோடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நீரோடி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் குழந்தை கடத்தலில் தொடர்புடையவர் என அந்த பகுதியில் உள்ள சில நபர்கள் சமூகவலைதளங்களில் பரப்பினர். அதேபோன்று வள்ளவிளை பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் குழந்தை கடத்தலில் தொடர்புடையவர் எனவும் வீடியோ பரவியது.

மேலும் ததேயுபுரத்தில் நடந்ததாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பரப்பி குழந்தை கடத்தலில் ஈடுபடும் நபர் என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. அதனுடன் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் நடந்த வீடியோ பதிவுகளும் தற்போது நடந்தது போன்று பரப்பப்பட்டு வருகிறது. இது பொது மக்களிடையே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பரப்பப்படும் குழந்தை கடத்தல் தொடர்பான செய்திகள் உண்மைக்கு புறம்பான வதந்தி ஆகும்.
மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்ததில் நீரோடி பகுதியில் குறிப்பிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், பொதுமக்கள் கொடுக்கும் உணவை உண்டு அந்த பகுதியில் சுற்றி திரிபவர் என்பதும் தெரியவருகிறது. அவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டு பொதுமக்களால் கையும், களவுமாக பிடிக்கப்பட்டார் என்னும் செய்தியில் உண்மை இல்லை. அதேபோன்று வள்ளவிளை பகுதியில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.
மேலும் ததேயுபுரத்தில் நடந்ததாக பரவிய வீடியோ அது அந்த பகுதியை சேர்ந்த கண்காணிப்பு கேமரா பதிவு அல்ல என்பதும், இவைகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பான வதந்திகள் என்பது இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்பி அச்சம் கொள்ள வேண்டாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 100 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்று வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் எஸ்பி சுந்தரவனம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications