"ஒன்னும் பிரச்னை இல்லை.. பதற்றம் வேண்டாம்!" தமிழகத்தில் மங்கி பாகஸ் பரவுமா.. அமைச்சர் மா.சு பளீச்
கன்னியாகுமரி: உலகில் சில நாடுகளில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சென்றுள்ளார்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயார்..காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட 3 குழுக்கள் அமைத்த சோனியா
அங்குள்ள மருத்துவ கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்து வரும் அவர், குமரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் ஆய்வு செய்து வருகிறார்.

கன்னியாகுமரி
இதற்கிடையே இன்று கன்னியாகுமரியில் உள்ள அரசு பொது மருத்துவமனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அங்குச் சிகிச்சை பெற்ற வந்த நோயாளிகளுடன் உரையாடிய அமைச்சர், அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் மனோ தங்கராஜும் உடன் இருந்தார்.

அமைச்சர் மா சுப்பிரமணியன்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் நிறையச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் இங்குள்ள அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தப்பட வேண்டியது அவசியம். நிலப்பரப்பு அதிகம் உள்ள இந்த மருத்துவமனையில் அடிப்படைத் தேவைகள் அதிகம் உள்ளன. பிரேதப் பரிசோதனை கூடம், நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஆகியவை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அச்சம் வேண்டாம்
உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இப்போது சில நாடுகளில் மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால், பொதுமக்கள் இதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. இது வேகமாகப் பரவும் தொற்று நோய் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பதற்றப்படத் தேவையில்லை.

தீவிர சோதனை
ஆஸ்திரேலியா, கனடா, பெல்ஜியம், உள்ளிட்ட நாடுகளில் குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கும் கூட உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. நோய்ப் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வரும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு ஏதாவது இருந்தால் அவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

மங்கி பாக்ஸ் என்றால் என்ன
மங்கி பாக்ஸ் என்பது பெரியம்மை பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் ஏற்படுத்தும் ஒரு நோயாகும். தோல்களில் தடிப்பு, கொப்பளங்கள், காய்ச்சல், தசை வலி மற்றும் தலைவலி ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும். இது பெரியம்மை நோயை விடக் குறைந்த ஆபத்தையே ஏற்படுத்தும். பொதுவாக இந்த வைரசால் பாதிக்கப்படுவோரில் 4 சதவீதத்திற்கும் குறைவான நபர்களே உயிரிழப்பார்கள் என்பதால் இதைக் கண்டு இப்போது அஞ்சத் தேவையில்லை.

எந்தெந்த நாடுகள்
இதுவரை மொத்தம் 12 நாடுகளில் 90க்கும் மேற்பட்டோருக்கு இந்த மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 28 பேருக்குச் சோதனை முடிவுகள் வரவில்லை. இங்கிலாந்து, போர்ச்சுகல், ஸ்வீடன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.