மனைவிக்கு செல்போனில் அடிக்கடி அழைப்பு.. நண்பனுக்கு நாகர்கோவில் இளைஞர் கொடுத்த மறக்க முடியாத பரிசு
கன்னியாகுமரி: செல்போன் மூலம் அடிக்கடி மனைவியை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்த தனது நண்பனுக்கு நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் மறக்க முடியாத பரிசு கொடுத்துள்ளார். நண்பனை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து அந்த பெண்ணின் கணவன், அங்கு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அடித்து வெளுத்துள்ளார். இதனால் தற்போது அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேலஉடையப்பன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகன் அபினேஷ். இவருக்கு 23 வயது ஆகிறது. இவருக்கு திருமணம் ஆகி மனைவியுடன் வசித்து வருகிறார்கள். அபினேஷ் மனைவிக்கு பறக்கை அருகே உள்ள பொட்டல்விளையை சேர்ந்த பிரதீபன் (20) என்பவர் செல்போன் மூலம் அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த அபினேஷ், பிரதீபனை அழைத்து கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் கேட்கவில்லையாம். எனவே பிரதீபனுக்கு தக்க பாடம் புகட்ட அபினேஷ் முடிவு செய்தார். இதற்காக தனது நண்பனான கீழ புத்தளம் பகுதியை சேர்ந்த ரேஷன் கடை ஊழியரான ஹரிஷ் (23) என்பவரை துணையாக சேர்ந்து கொண்டார்.
பிரதீபன் திருமண நிகழ்ச்சிக்கு அலங்காரம் செய்யக்கூடிய வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரை விசேஷ நிகழ்ச்சிக்கு அலங்காரம் செய்ய ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரும்படி, வேறு ஒரு நம்பரில் அபினேஷ் திட்டமிட்டு அழைத்தார். அதன்படியே மணிகட்டி பொட்டல் காட்டு பகுதிக்கு பிரதீபனை வரவழைத்தனர்.
அங்கு ஏற்கனவே தயாராக இருந்த அபினேஷ், ஹரிஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து பிரதீபனை கம்பால் சரமாரியாக தாக்கி உள்ளார்கள். இந்த பயங்கர தாக்குதலில் பிரதீபன் படுகாயமடைந்தார். பின்னர் 2 பேரும் பிரதீபனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்கள்.
இதனை பார்த்தவர்கள் காயமடைந்த பிரதீபன் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து பிரதீபன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அபினேஷ், ஹரிஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அப்போது தான் அபினேஷ் மனைவிக்கு செல்போனில் பிரதீபன் தொந்தரவு தந்தது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications