பொள்ளாச்சி டூ குமரி.. ஜோடியாக பஸ்சில் ஜெகஜால வேலை பார்த்த மஞ்சு - விஜயா! பொறிவைத்து பிடித்த போலீஸ்
குமரி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து டிப் டாப் ஆடைகள் அணிந்து கொண்டு குமரி மாவட்டத்தையே கலங்க வைத்த மஞ்சு - விஜயா நாகர்கோவில் துணை சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர். ஓடும் பஸ்கள், கூட்டம் அதிகம் உள்ள இடங்களை குறிவைத்து இந்த டிப் டாப் ஜோடியினர் கைவரிசை காட்டியுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஓடும் பஸ்சில் நகை, பணம் திருடுப் போவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கூட்டமாக செல்லும் பஸ்களில் இதுபோன்று நகை, பணம் திருடு போவதாக வந்த புகார்களை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் இதனை கண்காணித்து விசாரணை நடத்த நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு லலித்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

10-க்கும் மேற்பட்ட வழக்குகள்
குறிப்பாக வடசேரி, நேசமணி நகர், கோட்டார், ஆசாரிபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் மட்டும் கடந்த இரண்டு வாரங்களில் பதிவாகி இருந்தது. அதன்பேரில் திருட்டு நடந்ததாக கூறப்பட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதேபோல் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலா அல்லது வேறு வேறு கும்பலா என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே சிசிடிவி கேமரா காட்சிகளில் இரு பெண்களின் உருவம் பதிவாகி இருந்தது. இந்த பெண்கள் தான் இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டதையும் போலீசார் கண்டறிந்தனர். அவர்கள் படத்தை வைத்து பார்த்தபோது, டிப் டாப் உடையுடன் வந்த அந்த இரண்டு பெண்களும் தான் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதை போலீசார் உறுதி செய்தனர். மேலும் அந்த இரண்டு பெண்களும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிடையாது என்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.
டிப் - டாப் ஜோடி கைது
இதையடுத்து அந்த பெண்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எப்படி இந்த திருட்டில் ஈடுபட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் குமரி மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டது கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மஞ்சு (வயது 34), விஜயா (35) என்பது தெரியவந்தது. இந்த இரு பெண்களும் ஜோடியாக சேர்ந்து தான் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் குமரி மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் கைவரிசையை காட்டியுள்ளனர். நாகர்கோவில், இரணியல், மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஜோடியாக சென்று இந்த திருட்டு சம்பவங்களை அரங்கேற்றியிருக்கிறார்கள். இவ்வாறாக தங்க நகைகளையும், ரூபாயும் ஆட்டையை போட்டது தெரியவந்துள்ளது.
2.50 லட்சம் பணம்
மேலும் திருடும் பணம், நகைகளையெல்லாம் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (39) என்பவரிடம் கொடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அரவிந்தையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 27 பவுன் தங்க நகைகளும், ரூபாய் 2.50 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருடிய பணங்களை அவர்கள் எங்கு பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் மட்டும் தான் இந்த செயலில் ஈடுபட்டனரா, வேறு கூட்டாளிகள் யாரும் உள்ளனரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications