கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு அந்த அறைக்கு சீல் வைத்தார். கல்லூரி முழுவதும் 2 டிஎஸ்பிகள், 6 இன்ஸ்பெக்டர்கள், 100 போலீஸார் என சுழற்சி முறையில் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் நேற்றைய தினம் தேர்தல் நடத்தப்பட்டது. இதற்காக தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த தேர்தலில் 69 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து வாக்குச் சாவடி மையங்களில் இருந்து ஈவிஎம் என சொல்லப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்கு ஆட்சியர் சரிபார்த்த பிறகு, அந்த அறைக்கு சீல் வைக்கப்படும். இதையடுத்து அந்த வாக்கு பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 1698 வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவு நடந்தது.
இந்த வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளை கொண்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு சீல் வைத்தார். வாக்குப்பதிவு மையத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் ஸ்டாக் ரூமில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. அது போல் கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு டவர்கள் என கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பாலிடெக்னிக் கல்லூரி முழுவதும் 2 டிஎஸ்பி, 6 இன்ஸ்பெக்டர்கள், 100 போலீசார் என பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது - மூன்று அடுக்கு பாதுகாப்புகள் இந்த கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும். அன்றைய தினம் மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு சீல்கள் நீக்கப்பட்டு வாக்குப் பெட்டிகள் சரிபார்த்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.












Click it and Unblock the Notifications