கன்னியாகுமரியில் டெம்போ டிரைவரின் சிறு தவறு.. கல்லூரி மாணவனுக்கு தலையிலேயே.. எங்கிருந்தோ வந்த எமன்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே உள்ள அம்சி ஒருபிலாவிளையை சேர்ந்தவர் மதன்சிங் ததேயு, முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மகன் பெர்பின் சிங் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் பெர்மின் சென்ற போது, டெம்போவின் கதவை திடீரென டிரைவர் திறந்தார். இதனால் கண் இமைக்கும் நேரத்தில் வந்த பேருந்து மாணவனுக்கு எமனாக மாறியது.
டிரைவர்கள் கவனிக்காமல் செய்யும் சிறு தவறு யாருக்கோ சிக்கலை ஏற்படுத்தும். சாலையில் செல்லும் நபர்களை கவனிக்காமல் போனால், சாலையில் திடீரென வாகனத்தை வேகமாக ஓட்டினால், கண் மூடிக்கொண்டு யூடர்ன் போட்டால், சாலை விதிகளை மதிக்காமல் வேகமாக சென்றால் நிச்சயம் யாருக்கோ அவர்கள் எமனாக மாறப்போகிறார்கள் என்று தான் அர்த்தமாகிறது. கன்னியாகுமரி அருகே மார்த்தாண்டம் பகுதியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே உள்ள அம்சி ஒருபிலாவிளையை சேர்ந்த மதன்சிங் ததேயு என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் மகன் பெர்பின் சிங்குக்கு 20 வயது ஆகிறது. இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி மாணவர் பெர்பின் சிங், நேற்று முன்தினம் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னர் மதியம் அவர் தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.
வெட்டுமணியில் இருந்து தேங்காப்பட்டணம் செல்லும் சாலையில் காப்புக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அங்கு நிறுத்தி இருந்த ஒரு டெம்போவின் கதவை டிரைவர் திடீரென திறந்தார். அப்போது பெர்பின் சிங் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் டெம்போ கதவு மீது மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த அரசு பஸ்சின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் பெர்பின்சிங் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்தை பார்த்தவர்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் டெம்போ டிரைவர் மஞ்சாடி பகுதியை சேர்ந்த முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இருசக்கர வாகனத்தில் சென்ற போது, திடீரென திறந்த டெம்போ கதவில் மோதிய கல்லூரி மாணவர் பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications