கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தம்பதி.. சின்ன தவறால்.. எமனாக மாறிய லாட்ஜ் சாவி
கன்னியாகுமரி: குஜராத் மாநிலத்தை சேர்ந்த 15 பெண்கள் உள்பட 29 பேர் கொண்ட குழுவினர் ஆன்மிக பயணமாக ரயில் மூலம் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் முதலில் ராமேஸ்வரத்தை சுற்றிபார்த்தனர். அடுத்ததாக கன்னியாகுமரி வந்தனர். இரவில் அறை எடுத்து தங்கியுள்ளார்கள். அதில் ஒரு தம்பதி 3வது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு சாவியால் நடந்த சம்பவம் சக சுற்றுலா பயணிகளை அதிர வைத்துள்ளது.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், மகாபலிபுரம், மதுரை, கொடைக்கானல், ஊட்டி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருச்சி, கோவை, பழனி மற்றும் திருச்செந்தூர் உள்பட பல்வேறு இடங்களுக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள். குறிப்பாக கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருவண்ணாமலைக்கு ஏராளமான வெளிமாநில பயணிகள் ஆன்மீக சுற்றுலாவாக வருகிறார்கள்.

அப்படித்தான் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 15 பெண்கள் உள்பட 29 பேர் கொண்ட குழுவினர் ஆன்மிக பயணமாக ரயில் மூலம் அண்மையில் ராமேஸ்வரம் வந்தனர். பின்னர் அந்த குழுவினர் அங்கிருந்து வேனில் கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் வந்தனர். அங்கு கன்னியாகுமரி கடற்கரை உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துள்ளனர். பின்னர் இரவில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். இந்த குழுவில் குன்காவாவ் மாவட்டம் மோட்டி குன்காவாவ் தாலுகா அம்ரேலி அபாசாராசேரி பகுதியை சேர்ந்த பாபரியா ஹரிலால் (வயது 72), அவரது மனைவி பாபாரியா சாப்ரஜின் (64) ஆகியோரும் இருந்தார்கள்.
இவர்கள் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் விடுதியின் 3-வது மாடியில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தனர். நேற்று காலையில் இந்த தம்பதி இருவரும் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினர்.
இதனை பார்த்து விடுதி ஊழியர்கள் மற்றும் தம்பதியினருடன் வந்த குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பிறகு பலியான தம்பதி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தம்பதி தங்கியிருந்த ஓட்டல் அறையில் உள்ள ஒரு கதவு தானாக பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. அந்த சாவி அந்த கதவின் வெளிப்புறம் இருந்துள்ளது. இதனால் தம்பதியினர் பரிதவித்தனர்.
இதனால் அந்த சாவியை எடுக்க ஜன்னல் வழியாக பாபாரியா ஹரிலால் சென்றுள்ளார். அவருக்கு மனைவி பாபாரியா சாப்ரஜின் உதவி செய்துள்ளார். அந்த சமயத்தில் கால் தவறி பாபாரியா ஹரிலால் கீழே விழும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறதுது. உடனே அவருடைய மனைவி காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது இருவரும் நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்பது கன்னியாகுமரி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications