கன்னியாகுமரியில் டியூசனுக்கு குழந்தைகளை அழைத்து சென்ற ராணுவ வீரரின் மனைவி.. காத்திருந்து வந்த எமன்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள மொட்டவிளையை சேர்ந்த ராஜன் அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராதிகா. ராதிகா தனது குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பிவிட்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது ராதிகாவை நோக்கி எமனாக ஒரு மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் வந்தது.. என்ன நடந்து என்பதை பார்ப்போம்.
சாலையில் நாம் ஒழுங்காக நடந்து சென்றாலும், மற்றவர்களும் அதேபோல் ஒழுங்காக வர வேண்டும். அப்படி ஒழுங்காக வராவிட்டால் விபத்து தான் ஏற்படும். அதேபோல் வாகனத்தில் நீங்கள் செல்லும் போது, போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிப்பீர்கள்.. மற்றவர்களும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அப்படி விதிகளை கடைபிடிக்காவிட்டால், விபத்து ஏற்படும். அப்படித்தான் சாலையில் அமைதியாக சென்ற ராணுவ வீரரின் மனைவி மீது இருசக்கர வாகன ஓட்டி மோதியிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள மொட்டவிளையை சேர்ந்த 43 வயதாகும் ராஜன் என்பவர் அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராதிகாவுக்கு 39 வயது ஆகிறது. இவர் பி.ஏ. பட்டதாரி ஆவார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. இந்த நிலையில் நேற்று ராதிகா குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பி விட்டு சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது மொட்டவிளையில் இருந்து பேயன்குழி நோக்கி வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் ராதிகா மீது வேகமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த சுற்றுச்சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே ராதிகா மீது மோதிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் நின்ற ஹிட்டாச்சி மீது மோதி கவிழ்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தாணிவிளையை சேர்ந்த ஜெசோ (23), பின்னால் அமர்ந்திருந்த ஆகாஷ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராதிகாவின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் ராணுவ வீரரின் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications