கன்னியாகுமரியை அசர வைத்த சோனியா... மார்த்தாண்டம் மாமா வீட்டில் நைட்டில் அப்படி ஒரு வேலை.. சிக்கினார்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மாமா வீட்டில் தங்க நகைளை திருடிய பெண், அந்த பணத்தில் ஸ்கூட்டர் வாங்கி இருக்கிறார். அவரை போலீசார் கைது செய்தனர். பிறந்த நாள் பார்டிக்கு வந்த பெண், இரவில் மாமா வீட்டில் எப்படி கைவரிசை காட்டினார்.. பின்னர் எப்படி சிக்கினார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நெல்சன் (வயது 60). நெல்சனின் தங்கையின் மகள் சோனியா (40) என்பவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆலுமூடு நடுவில்கரையில் கணவருடன் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று சோனியா மார்த்தாண்டத்தில் பிறந்தநாள் விழாவிற்காக ஒரு வீட்டுக்கு வந்தார். பின்னர் இரவில் தனது மாமாவான நெல்சனின் வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறார்.

மறுநாள் காலையில் சோனியா அவசரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். அவர் சென்ற பின்னர் நெல்சன் தனது வீட்டில் உள்ள பீரோவில் பார்த்தபோது அதிலிருந்த 5 பவுன் சங்கிலி, ஒன்றரை பவுன் பவுன் வளையல் என ஆறரை பவுன் தங்க நகைகளை காணவில்லை.
இதுகுறித்து அவர் சோனியாவிடம் செல்போனில் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லையாம். எனவே அவர் மீது சந்தேகம் அடைந்த நெல்சன் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்தபோது சோனியாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து சோனியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அத்துடன் போலீசார் கேரளாவில் சோனியாவின் வீட்டுக்கு சென்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மாமா நெல்சனின் வீட்டில் தங்க நகைகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். திருடிய நகைகளை தனது நண்பர் மூலம் விற்பனை செய்து அந்த பணத்தில் ஸ்கூட்டர் வாங்கியதாக கூறினார். இதையடுத்து சோனியாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தக்கலை சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications