இ-சேவை மையம் பாணியில் சொந்த ஊரில் ஜம்முன்னு வேலை.. இளைஞர்களுக்கு 6 லட்சம் மானியம் தரும் அரசு
கன்னியாகுமரி: விவசாயிகளின் நலன் காத்திடும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு மாநில திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் என்னும் திட்டம் 2025-2026-ம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் கூறியிருந்தது. இதன்படி பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்கள் உழவர் நல சேவை மையங்கள் தொடங்க ரூ.6 லட்சம் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி பெறலாம் என்பதை பார்ப்போம்.
விவசாயிகள் தங்கள் குறைகள், புகார்கள், மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்கவும், அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்களைப் பெறவும், விவசாயம் சார்ந்த உதவிகளைப் பெறவும் தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் (Chief Minister's Farmer Welfare Service Center) என்ற திட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறது.

அனைத்து விவசாயம் சார்ந்த துறைகளின் சேவைகளையும் ஒரே இடத்தில் கொண்டு வருவதுடன், விவசாயிகளின் குறைகளைப் பதிவு செய்து, விரைவான தீர்வு பெறுவதை உறுதி செய்வதற்கு இத்திட்டம் உதவிகரமாக இருக்கும் என அரசு நம்புகிறது. இந்த திட்டத்தின் மூலம் அரசின் புதிய திட்டங்கள், மானியங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குத் தெரியப்படுத்த முடியும் என்பதால் இதனை ஆரம்பித்துள்ளது.
இந்தச் சேவை மையத்தின் கீழ், ஒரு விவசாயி வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடைப் பராமரிப்பு, பட்டு வளர்ச்சி, மீன்வளம் போன்ற பல துறைகளின் சேவைகளையும் பெற முடியும். இந்த மையம் தொடங்க அரசு 6 லட்சம் ரூபாய் மானியம் வழங்குகிறது.இதனை எப்படி பெறலாம் என்பதை பற்றி அதிகாரிகள் விளக்கி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஜென்கின் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "விவசாயிகளின் நலன் காத்திடும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு மாநில திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் என்னும் திட்டம் 2025-2026-ம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி வேளாண்மை தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்த இளைஞர்களின் பட்டறிவும் தொழில்நுட்பத்திறனும் உழவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் ஆயிரம் எண்ணிக்கையில் உழவர் நல சேவை மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட 30 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும்.
அதன்படி முதல்வரின் உழவர் நல சேவை மையம் குமரி மாவட்டத்திற்கு ரூ.10 லட்சத்தில் 7 எண்ணிக்கையிலும் ரூ.20 லட்சத்தில் 3 எண்ணிக்கையிலும் என மொத்தம் 10 எண்ணிக்கையில் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது.
ரூ.10 லட்சம் முதலீட்டில் அமைக்கப்படும் உழவர் நல சேவை மையத்திற்கு மானியமாக ரூ.3 லட்சமும், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் சேவை மையத்திற்கு ரூ.6 லட்சமும் மானியமாக வழங்கப்படும். பயனாளிகள் தங்களது விண்ணப்பங்களை நேரடியாக வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் 30 சதவீத பயனாளிகள் பெண்கள் மற்றும் ஆதி திராவிடர் பழங்குடியினராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்கு உட்பட்ட வேளாண் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்த நபர்கள் வங்கிகளில் தங்களுடைய விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்ற பின்பு மானிய உதவி பெற https/www.tnagrisnet.tn.gov.in/KaviaDPscheme-register 6 உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications