"லவ் டுடே.." ஒரு பெண்ணுக்காக நடுரோட்டில் கட்டி உருண்ட 2 ஆண்கள்.. தடதடத்த தக்கலை
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் காதலியை கரம்பிடிக்க 2 வாலிபர்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொது இடங்களில் அவ்வப்போது ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொள்ளும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருவதும் அது குறித்த செய்திகள் வெளியாவதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வாகவே தற்போதெல்லாம் நடைபெற்று வருகிறது.
மதுபோதையில் சண்டை, பழிவாங்குவதற்காக சண்டை என இந்த மோதல்களுக்கான காரணங்களை பட்டிலியட்டுக் கொண்டே இருக்கலாம்.
ஷாரோனை கொல்ல 10 வாட்டி ட்ரை பண்ணேன்.. ஜூஸ் பாட்டிலில் மாத்திரை.. காதலி கிரீஷ்மா பரபர வாக்குமூலம்!

பெண்ணுக்காக கட்டிப்புரண்ட இளைஞர்கள்
இதேபோன்ற ஒரு சம்பவம் தான் கன்னியாகுமாரி மாவட்டம் அருகே தக்கலையில் நடைபெற்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பெண்ணுக்காக இரு இளைஞர்கள் நடு ரோட்டில் கட்டிபுரண்டு தாக்கிக் கொண்ட காட்சிகள் கன்னியாகுமரியில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வேர்க்கிளம்பி என்ற பகுதி உள்ளது. அங்குள்ள அழகிய மண்டபம் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

சரமாரியாக தாக்கிக் கொண்டனர்
அதுவும் காலை மற்றும் மாலை வேளைகளில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். இத்தகைய பரபரப்பான காலை வேளையில் அழகிய மண்டபம் சாலையில் இரண்டு இளைஞர்கள் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர். அருகில் ஒரு இளம்பெண் நின்று கொண்டிருக்க அவர் கண் எதிரே இரு இளைஞர்களும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த மேலும் இரண்டு பேர், ஒரு இளைஞரை மட்டும் பிடித்து கடுமையாக தாக்கத் தொடங்கினர்.

சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை
மூன்று பேர் தாக்கியதில் நிலைகுலைந்த இளைஞர் காயம் அடைந்து சாலையில் விழுந்தார். சினிமா காட்சிகள் போல நடைபெற்ற மோதலால் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பலரும் சாலையில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். காயம் அடைந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அப்பகுதியில் உள்ளவர்கள் சேர்த்தனர். இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை மீட்டு விசாரணை நடத்தினர்.

சினிமா கதைகளை மிஞ்சும் வகையில்..
வெற்றிக்கோடு போலீசார் நடத்திய சண்டையில் பெண்ணுக்காக இரு இளைஞர்களும் சண்டை போட்டது தெரியவந்தது. அதிலும் அடிவாங்கிய இளைஞர் முன்னாள் காதலனாம். சினிமா கதைகளை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த மோதல் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். தனது காதலிக்கு கேட்ட பொருளை எல்லாம் வாங்கி கொடுத்து தனது காதலை இளைஞர் வளர்த்து வந்துள்ளார்.

ஒருதலை காதல்
இதற்கு மத்தியில், காதலியின் பக்கத்து வீட்டு இளைஞரும் அந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்து இருக்கிறார். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு காதல் வலை வீசியுள்ளார். ஆனால், இதை முதலில் அந்த இளம் பெண் ஏற்கவில்லையாம். இருந்தாலும் ஒருதலையாக காதலித்து வந்து இருக்கிறார். இந்த நிலையில் காதலன், இளம்பெண்ணின் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஒருதலையாக காதலித்த இளைஞர், காதலனிடம் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு இருக்கிறது.

காதல் ஜோடிகளுக்குள் பிளவு
அப்போது தனது காதலியிடம் பக்கத்து வீட்டு இளைஞர் சொல்வது குறித்து காதலன் கேட்டு இருக்கிறார். அதற்கு காதலி, என்னை பெண் கேட்டு வீட்டிற்கு வந்து விடு என்று சொன்னதாக தெரிகிறது. பெண் கேட்டு சென்ற போது, படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக இளம்பெண்ணின் பெற்றோரும் தெரிவித்து விட்டனர். இதற்கு மத்தியில், இந்த காதல் ஜோடிகளுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

முதல் காதலனை கழற்றி விட்டுவிட்டு..
பக்கத்து வீட்டு இளைஞரின் காதல் வலையில் சிக்கிய இளம் பெண், முதல் காதலனை கழற்றி விட்டு இருக்கிறார். இதனால், கோபம் அடைந்த முதல் காதலன், நான் உனக்காக எவ்வளவு செலவு செய்து இருக்கிறேன்... எத்தனை பொருட்கள் வாங்கி கொடுத்தேன்... இதையெல்லாம் மறந்து விட்டு இப்படி சென்று விட்டாயே...எனக்கூறியதோடு.. அனைத்து பொருட்களையும் திரும்பி தருமாறு கேட்டு இருக்கிறார். இதை இளம் பெண்ணும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

முன்னாள் காதலனுக்கு அடி
இந்த நிலையில் தான், வேர்க்கிளம்பி பகுதியில் இளம்பெண் தனது தற்போதைய காதலனுடன் பைக்கில் சென்றதை முன்னாள் காதலன் பார்த்து இருக்கிறார். அப்போது ஏற்பட்ட தகராறில் தான் முதல் காதலனை, தற்போதைய காதலன் அடித்து துவம்சம் செய்து இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி பகுதியில் நேற்று பரபரப்பாக பலரும் பேசிக்கொண்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.