ஆவேச தாக்குதல் நடத்திய திமுகவினர்.. கரூர் அரசு மருத்துவமனையில் 4 வருமான வரி துறை அதிகாரிகள் அனுமதி
கரூர்: கரூர் வருமான வரித் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் 4 அதிகாரிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40 - க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 22 இடங்களில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டு அதிகாரிகள் அதிகாலையிலேயே வந்துவிட்டனர்.

இந்த நிலையில் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் வருமான வரித்துறையினர் வந்தனர். அப்போது அவர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் அங்கு கூடிய தொண்டர்கள் அதிகாரிகளை உள்ளே விடாமல் வாக்குவாதம் செய்தனர்.
கார் கண்ணாடிகளை உடைத்து அராஜகம் செய்தனர். அப்போது வருமான வரித் துறையினருடன் திமுக தொண்டர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் திமுகவை சேர்ந்த சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அது போல் காயத்ரி உள்பட 4 வருமான வரித் துறை அதிகாரிகளும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்னும் சில இடங்களில் திமுகவினர் திரண்டு கொண்டு அதிகாரிகளை உள்ளே விடாமல் இருந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பிறகு அதிகாரிகளிடம் இருந்த கோப்புகளை பறித்து தூக்கி எறிந்ததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு 9 இடங்களில் சோதனை நடத்தாமல் அதிகாரிகள் கரூர் எஸ்பி அலுவலகத்திற்கு தஞ்சமடைய சென்றனர்.
அங்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். இதையடுத்து தங்களுக்கு ரெய்டு குறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால் போலீஸார் பாதுகாப்பு கொடுத்திருப்போம் என கூறிய எஸ்.பி. சுந்தரவதனம் உடனடியாக போலீஸார் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து நிறுத்தப்பட்டிருந்த 9 இடங்களிலும் ரெய்டு தொடங்கியது.
இந்த நிலையில் கரூரில் கட்சி தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். மேலும் தனது வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்படவில்லை என்றும் தனது சகோதரர், நண்பர்கள் வீடுகளில் நடத்தப்படுவதாகவும் இது வழக்கமாக நடக்கும் சோதனைதான் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அங்கு நடந்த விரும்பத்தகாத செயல்கள் குறித்து திமுக முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி என்ன விளக்கங்களை அளித்தாரே அவர் முன்மைொழிந்ததை நான் வழி மொழிகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications