ரூ 100 கோடி நில மோசடி வழக்கு! எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீட்டில் நடந்த சிபிசிஐடி ரெய்டு நிறைவு!
கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவருடைய கரூர் வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வந்த நிலையில் சோதனை நிறைவடைந்துள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் போலீஸ் மற்றும் எஸ்பி அலுவலத்தில் புகார் தரப்பட்டது.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து, இந்த நிலமோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். தன்னுடைய அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் விஜபாஸ்கரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் கரூர் நீதிமன்றத்தில் மீண்டும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கரூர் நீதிமன்றம் கடந்த இரண்டு நாட்களாக உத்தரவை தள்ளி வைத்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர். கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள எம் ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் செல்வராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரகு ஆகியோரது வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 2 மணி நேரத்துக்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் தாளப்பட்டி மணல்மேடு பகுதியில் உள்ல யுவராஜ் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இதில் நிலமோசடி தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா? என தேடினர். இந்த நிலையில் நேற்று எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதேபோல் அவரது சசோகதரர் சேகரின் முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்களில் இரண்டாவது நாளாக சிபிசிஐடி போலீஸார் ரெய்டு நடத்தினர். எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான கரூர் என்.எஸ்.ஆர். நகரில் உள்ள வாடகை வீடு, ரெயின்போ அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவருடைய தம்பி சேகர் வீட்டிலும் இன்று 2ஆவது நாளாக ரெய்டு நடத்தப்பட்டு வந்தது.
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 7 இடங்களில் இன்று காலை முதல் 8 மணி நேரமாக நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவு பெற்றுள்ளது. ஆவணங்கள் சிலவற்றை சிபிசிஐடி அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications