தங்கைக்காக அன்று செந்தில் பாலாஜி.. அண்ணனுக்காக இன்று தங்கை ஜோதிமணி.. அரவக்குறிச்சியில் பிரச்சாரம்
செந்தில் பாலாஜிக்காக ஜோதிமணி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
அரவக்குறிச்சி: அண்ணனுக்காக தங்கையும், தங்கைக்காக அண்ணனும் என கரூர் மாவட்டத்தை தங்களது பாச பிரச்சாரத்தால் கலக்கிக் கொண்டுள்ளனர் திமுகவின் செந்தில்பாலாஜியும், காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி. இவர்களது பாச பிரச்சாரம் மக்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
நடந்து முடிந்த எம்பி தேர்தலில் கரூர் தொகுதியில் ஜோதிமணி போட்டியிட்டார். ஆனால் எதிர்தரப்பில் அதிமுக சார்பில் தம்பிதுரை வேட்பாளராக களம் இறங்கியதால் ஏகப்பட்ட அச்சுறுத்தல்கள் ஜோதிமணிக்கு பிரச்சாரத்தின்போது ஏற்பட்டது.
ஆரம்பம் முதலே தேர்தல் கமிஷன், மாவட்ட நிர்வாகம், போலீஸ் தரப்பில் என குடைச்சல் இருந்தது. இதனால் ஜோதிமணியால் கரூரில் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஸ்டாலினின் பரிந்துரைப்படி, செந்தில்பாலாஜி ஜோதிமணிக்காக களம் இறங்கினார்.

ஜோதிமணி
செந்தில்பாலாஜி ஜோதிமணி பக்கத்தில் வந்து நின்றதும், அவரது தலையீட்டால் நிலைமை ஓரளவு அடங்கியது. ஜோதிமணியும் போகும் இடமெல்லாம் அண்ணன் செந்தில் பாலாஜி என்று பாசம் காட்டினார். செந்தில் பாலாஜியும் தனது சகோதரிக்காக ஓட்டு போட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். அத்தோடு நிற்கவில்லை, தம்பிதுரை, அமமுக வேட்பாளர்களை ஒரு கை பார்த்தார் தனது அனல் பேச்சால்.

தனி செல்வாக்கு
இதனால்தானோ என்னவோ, இப்போது அரவக்குறிச்சியில் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் செந்தில்பாலாஜிக்காக வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார் ஜோதிமணி. கரூர் தொகுதியை பொறுத்தவரை, செந்தில் பாலாஜிக்கென்று யாரும் பிரச்சாரம் செய்யவே தேவையில்லை. அந்த அளவுக்கு அவருக்கு ஒரு தனி செல்வாக்கு இருக்கிறது.
|
பாச பிரச்சாரம்
இருந்தாலும் ஜோதிமணி தன்னுடைய விசுவாசத்தையும், நன்றியையும், பாசத்துடன் கலந்து இப்போது காட்டி வருகிறார். நடக்க போகிற 22 தொகுதி இடைத்தேர்தலில் அதிக அளவு வித்தியாசத்தில் ஜெயிக்க போவது செந்தில் பாலாஜிதான் என்று ஜோதிமணி அடித்து சொல்கிறார்.

வாக்கு சேகரிப்பு
மேலும் எங்கெல்லாம் வாக்கு சேகரிக்க செந்தில்பாலாஜி செல்கிறாரோ அங்கும் தங்கை ஜோதிமணியும் செல்கிறார். வேட்பு மனு தாக்கலின்போதும் கூட பாசக்கார தங்கச்சியாக, செந்தில் பாலாஜி அருகே அப்படி ஒரு ஆர்வத்தோடு அவர் அமர்ந்திருந்தது இன்னும் தொகுதி மக்கள் மறக்கவில்லை. அன்று தங்கைக்காக அண்ணனும், இன்று அண்ணனுக்காக தங்கையும் என வாக்கு சேகரிப்பதை ஒட்டுமொத்த தொகுதியும் நெகிழ்வுடன் கவனித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications